மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி-பதுளை வீதியில் உள்ள மக்கள் காட்டுயானை பிரச்சினைக்கு தீர்வை பெற்று தரக் கோரி செங்கலடியில் பேரணியொன்றை மேற்கொண்டு, பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செங்கலடி-பதுளை வீதியில் உள்ள கித்துள்,வெலிக்காண்டி, உறுகாமம், கரடியனாறு, புல்லுமலை, மாவளையாறு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து இதனை முன்னெடுத்துள்ளனர்.
செங்கலடி சந்தி பிரதான வீதி ஓரத்தில்,இன்று(14.06.2023) காலை கூடிய பொதுமக்கள் கையில் பதாகைகளை ஏந்தியவாறு செங்கலடி பிரதான வீதியால் செங்கலடி பிரதேச செயலகம் வரை பேரணியாக வந்து பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்து உரையாடிய செங்கலடி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரிடம் பொதுமக்கள் மகஜர்களையும் கையளித்துள்ளனர்.
நீண்டகாலமாக தாங்கள் யானைகளின் அச்சுறுத்தல்களுடன் வாழ்ந்துவருவதாகவும் தமது வாழ்வாதாரம் அழிக்கப்படுவதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இப்பகுதியில் உள்ள அதிகளவான மக்கள் மீன்பிடி மற்றும் விவசாயம்,கால்நடைகளை அடிப்படையாக கொண்டு வாழும் நிலையில் இந்த தொழில்களை செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

