வடக்கு கிழக்கிற்கு இனிமேல் விசேட நிதி ஒதுக்கீடு

66 0

எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் வடக்கு கிழக்கிற்கு விசேட நிதியொதுக்கீடுகளை செய்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (14.06.2023) விவசாய அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மாவட்ட ரீதியாக ஆராயப்பட்டது.

அறுவடையின் பின்னர் நெல் கொள்வனவினை விவசாயிகளுக்கு ஏற்ற தொகையில் நெல் கொள்வனவு மேற்கொள்ளுதல்,விவசாயிகளுக்கான நீர்பாய்ச்சல் குளங்களை புனரமைத்தல், உரத்தினை உரிய திகதிகளில் பெற்றுக்கொள்ளல், விவசாயிகளுக்கான காப்புறுதிகளை பெற்றுக்கொள்ளல், விவசாயிகள் விதைப்பு காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது.

இதன்போது விவசாயிகளினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் அவற்றினை நாளை விவசாய அமைச்சர் தலைமையில் நடைபெறும் விசேட கூட்டத்தில் முன்வைத்து தீர்வுகளைப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா,திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள்,விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து மட்டக்களப்பு- களுதாவளைக் கிராமத்தில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் “இந்த நிலையத்தை விரைவில் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

இந்த பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2017ஆம் ஆண்டு நிருமாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2018 இல் முடிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தற்போது வரை திறந்து வைக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசாங்கத்தின் நிதி வீணடிக்கப்படுவதென்பது, பாரிய பிரச்சனையாகும். இதைத்தான் தற்கால இளைஞர்களும் தட்டிக் கேட்கின்றார்கள்.

எனவே நாம் இதனை விரைவாகத் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு விடவேண்டியுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு பெரிதும் நன்மை கிடைக்க வேண்டும்.எனவே இதற்குரிய சில பழுதுபார்ப்பு வேலைகளுக்குரிய நிதி ஒதுக்கீடுகளை எமது அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதனை விலைவில் திறந்து வைக்கவுள்ளோம். இருந்த போதிலும் இந்த பொருளாதார மத்திய நிலையத்தை மேலும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதும் இப்பகுதி மக்களினுடைய கையில்தான் உள்ளது என தெரிவித்துள்ளார்.