ஒடிசாவில் இருந்து தமிழகத்துக்கு 70,000 டன் நிலக்கரி வருகிறது

56 0

தமிழக மின் வாரியம் தனது அனல்மின் நிலையங்களின் மின் உற்பத்திதேவைக்கான நிலக்கரியை, ஒடிசா மாநிலம் தால்சர் மற்றும் ஐபி வேலிசுரங்கங்களில் இருந்து எடுக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது

தால்சர் சுரங்கத்தில் எடுக்கப்படும் நிலக்கரி, பாரதீப் துறைமுகம் வரை ரயிலில் கொண்டு வரப்பட்டு, பின்னர் கப்பல் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

சுரங்கத்தில் இருந்த துறைமுகத்துக்கு தினமும் நிலக்கரி கொண்டுவருவதற்காக 14 சரக்குப் பெட்டிகளை தமிழக மின் வாரியத்துக்கு மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. தால்சர் சுரங்கம் மற்றும் பாரதீப் துறைமுகம் இடையேயான ரயில் வழித் தடத்தில் போக்குவரத்து அதிகம் உள்ளதால், தினசரி 11 ரயில் பெட்டிகள் மூலம் மட்டுமே நிலக்கரி துறைமுகத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

எனவே, வேறு துறைமுகங்கள் வழியாக நிலக்கரியைக் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து மின்வாரியம் ஆய்வு மேற்கொண்டது.

கோபால்பூர் துறைமுகத்தில் இருந்து தினமும் 20 ஆயிரம் டன்னும், தாம்ரா துறைமுகத்தில் இருந்து 35 ஆயிரம் டன்னும் நிலக்கரியைக் கையாள வாய்ப்புள்ளது. இதையடுத்து, அங்கிருந்து கப்பல்மூலம் நிலக்கரியைக் கொண்டுவருவதற்கு தாம்ரா துறைமுகத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் மின் வாரியம் ஒப்பந்தம் வழங்கியது.

இந்த ஒப்பந்தத்தின்படி, வரும் 1-ம் தேதி முதல் நிலக்கரியை எடுத்து வரும் பணியை மின் வாரியம் தொடங்கி உள்ளது. இம்மாத இறுதிக்குள் 70 ஆயிரம் டன் நிலக்கரி, கப்பல் மூலம் எண்ணூர் கொண்டு வரப்படும்.