தொழிலாளர்களின் பணியிட பாதுகாப்பு நிர்வாகங்களின் பொறுப்பு: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தல்

78 0

தொழிலாளர்களின் பணியிட பாதுகாப்பை அமல்படுத்துவது அந்தந்தநிர்வாகங்களில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் முக்கிய பொறுப்பு என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை,தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் தமிழ்நாடு பிரிவு, சென்னை துணைக்குழு சார்பில், மூத்த அதிகாரிகளுக்கான பாதுகாப்பு தலைமைத்துவ திட்டம் குறித்த ஒருநாள் பயிலரங்கு சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்று பயிலரங்கைத் தொடங்கிவைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள தொழிற்சாலை நிர்வாகங்கள் தங்கள் ஊழியர்களுக்குப் பாதுகாப்பான பணிச்சூழலை வழங்குவதற்காகச் செய்யும் ஒருங்கிணைந்த முயற்சிகள் பாராட்டுக்குரியவை. பணியிடத்தில் பாதுகாப்பை அமல்படுத்துவது அந்தந்த நிர்வாகங்களில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் முக்கியப் பொறுப்பு.

தொழிற்சாலை நிர்வாகங்கள், தொழிலாளர்கள் மத்தியில் பணியிட பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை திரையிட வேண்டும். தொழிலாளர்களின் உயிர் விலை மதிக்கமுடியாதது. அதனால் போதிய விழிப்புணர்வு இல்லாதது, அலட்சியம் போன்ற காரணங்களால் விபத்துகள் நிகழ்ந்து விலை மதிக்க முடியாத உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொழிலாளர் நலத் துறை செயலர் முகமது நசிமுத்தின் பேசும்போது, “தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகள் பெரும்பாலும், தொழிற்சாலை நிர்வாகம் மற்றும்தொழிலாளர்களின் அலட்சியத்தால் மட்டுமே ஏற்படுகின்றன. அதனால் அனைத்து நிலைகளிலும் பணியிடங்களில் பாதுகாப்பு வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தொழில்நுட்ப ரீதியாக திறன் பெற்றவர்களை மட்டுமே பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும்” என்றார்.

தொழிலக பாதுகாப்பு மற்றும்சுகாதாரத் துறை இயக்குநர் எம்.வி.செந்தில்குமார் பேசும்போது, “பல்வேறு அறிவியல் வளர்ச்சி காரணமாக இயந்திர தவறுகளால் ஏற்படும் விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன. அதனால் பணியிடபாதுகாப்பு அமலாக்கத்தை கண்காணிப்பதன் மூலம் விபத்துகளைக் குறைக்க முடியும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் தமிழ்நாடு பிரிவு துணைத் தலைவர் டி.பாஸ்கரன், செயலாளர் பி.ராஜ்மோகன்,பொருளாளர் கே.ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.