பழைய பேருந்து நிலையம் வரை உள்ளூர் சேவைகள் ! கலந்துரையாடலில் தீர்மானம்!

149 0

வவுனியாவில் உள்ளூர் சேவைகளில் ஈடுபட்டுவரும் அரச தனியார் பேருந்துகள் பழையபேருந்து நிலையம் வரை சென்று ஐந்து நிமிடங்கள் தரித்து நின்று சேவையில் ஈடுபடவேண்டும் என தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

வவுனியா நகரத்தில் உள்ள சில முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக வவுனியா மாவட்ட செயலாளர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று புதன்கிழமை (14) இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் பழைய பேருந்துநிலையம்வரை உள்ளூர் பேருந்துசேவைகளை நடாத்துவதற்கான செயற்பாட்டை முன்னெடுக்குமாறு வர்த்தகர்சங்கத்தினரால் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

குறிப்பாக அந்தபகுதியில் அதிகளவான வியாபாரநிலையங்கள் இருப்பதால் பொதுமக்கள் அங்கு வந்துசெல்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். எனவே குறித்த விடயம் தொடர்பாக கரிசனை கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பாக அரச, தனியார் பேருந்து தரப்பினரிடமும் கருத்துக்கள் கோரப்பட்டது. இதன்போது பழைய பேருந்து நிலையப்பகுதிக்குள் சேவையில் ஈடுபடுவதில் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த நடைமுறையை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன், இது தொடர்பாக வடமாகாண ஆளுனர் மற்றும் பிரதமசெயலாளர் ஆகியோருக்கும் தெரியப்படுத்தி மேலதிக நடவடிக்கையை முன்னெடுக்குமாறு தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் அதிகளவான கட்டணங்களை வசூலிப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக முதலாவது கிலோமீற்றருக்கு 120 ரூபாயும் அடுத்து வரும் கிலோமீற்றர்களுக்கு 100 ரூபாயும் அறவிடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர், தற்போது வவுனியாவில் முதலாவது கிலோமீற்றருக்கு 150 ரூபாயும் அடுத்து வரும் கிலோமீற்றர்களுக்கு 100 ரூபாயும் அறவிடுவதாகவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவற்றைவிட அதிகமாக கட்டணம் அறவிடப்பட்டால் குறித்த முச்சக்கரவண்டிகள் தொடர்பாக எமக்கு தெரியப்படுத்தினால் அது தொடர்பாக நாம் விசாரணை செய்து உரிய நடவடிக்கையினை எடுப்போம்.

அத்துடன் எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் வாகன உதிரிப்பாகங்களின் விலை அதிகரித்து காணப்படுவதால் முச்சக்கரவண்டி உரிமையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகின்றனர். எனினும் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக எமது சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்திற்கு வருவதாக தெரிவித்திருந்தார்.

குறித்த கலந்துரையாடலில் அரச அதிபர் பி.ஏ.சரத்சந்திர,அபிவிருத்திக்குழு தலைவர் கு.திலீபன்,மாநகரசபை செயலாளர்,உதவி பிரதேச செயலாளர், வர்த்தகர்சங்கம்,முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம்,நடைபாதை வியாபாரிகள் சங்கம், உட்பட பலர் கலந்துகொண்டனர்.