ரங்கன ஹேரத்தின் புதிய சாதனையுடன் இலங்கை அணி வெற்றி

271 0

சர்வதேச டெஸ்ட் கிரிக்கட் அரங்கில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்தின் புதிய சாதனையுடன் பங்களாதேஷ் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணி 259 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 494 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில் 274 ஓட்டங்களையும் பெற்றது.

முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றதுடன், தனது இரண்டாவது இன்னிங்சில் 197 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டியை கைப்பற்றியுள்ள இலங்கை அணி சார்பாக ரங்கன ஹேரத் 59 ஓட்டங்களுக்கு 06 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்மூலம் ரங்கன ஹேரத் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 363 விக்கட்டுக்களை கைப்பற்றி, அதிக விக்கட்டுக்களை வீழ்த்திய வெற்றிகரமான இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்துள்ளார். முன்னராக நியூஸிலாந்து அணி வீரர் டேனியல் விட்டோரி 362 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தமை கூறத்தக்கது.