இலங்கை அரசாங்கத்திற்கு கடும் நிபந்தனையுடன் கால அவகாசத்தை வழங்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்

238 0

ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை, அரசாங்கம் விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு, கால அட்டவணையுடன் கூடிய அவகாசத்தை, கடும் நிபந்தனையுடன் வழங்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

ஜெனீவா விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து, எதிர்கட்சித்தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் தலைமையில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று வவுனியாவில் நடைபெற்ற கலந்துரையாடலில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைப் பேரவையால், 2015 ஐப்பசி 1 ம் திகதி இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரனையுடன் நிறைவேற்றப்பட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் 30 – 1 தீர்மானத்தில், இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்ட அத்தனை விடயங்களும் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

இவை கடுமையான நிபந்தனைகளின் கீழ் நிறைவேற்றப்படுவதை, ஐ.நா மனித உரிமை ஸ்தானிகரின் அலுவலகம் ஒன்றை இலங்கையில் நிறுவி மேற்பார்வை செய்ய வேண்டும்.

இலங்கை அரசாங்கம் மேற்சொன்ன விடயங்களை தகுந்த பொறிமுறையின் மூலம் நிறைவேற்றத்தவறினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தத் தீர்மானத்தின் கீழ் கிடைக்க வேண்டிய அனைத்து பெறுபேறுகளும் கிடைக்கும் வண்ணமாக சர்வதேசப் பொறிமுறைகளை ஐ.நா மனித உரிமைப் பேரவை உறுதி செய்ய வேண்டும்.

போன்ற தீர்மானங்கள் இன்றை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பாக கட்சியின் தலைவருடன் கலந்துரையாடிய பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு தமது நிலைப்பாட்டை அறிவிப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

அதேவேளை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அவசர கலந்துரையாடலை இடம்பெறும் மண்டபம், கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் விசேட அதிரடிப்படையினரால் சோதனையிடப்பட்டுள்ளது.

ஜெனீவா விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து, எதிர்கட்சித்தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் தலைமையில், நடைபெற்ற இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபன், த.சித்தார்த்தன், யோகேஸ்வரன், கோடிஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா மற்றும் வட மாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம், பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, வட மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான அரியரட்னம், கஜதீபன், இந்திரராஜா, தியாகராசா, மயூரன், விந்தன் கனகரட்ணம், சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை இன்றைய கலந்துரையாடலில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

அத்துடன் மதிய உணவு இடைவேளையின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கலந்துகொண்டார்.
இன்றைய கலந்துரையாடல் தொடர்பில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், 41 மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.