யேர்மன் தமிழ்க் கழகங்களுக்கிடையிலான தமிழீழ உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2023-27.05.2023

973 0

தமிழீழ வெற்றிக் கிண்ணத்திற்கான 11 பேர் கொண்ட உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி முதன்முதலாக சோலிங்கன் நகரில் 27.05.2023 இல் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது.இப் போட்டியின் ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு யேர்மனியத் தேசியக் கொடியோடு தமிழீழத் தேசியக் கொடியும் கம்பீரமாக ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு அகவணக்கத்துடன்  முள்ளிவாய்க்கால் மண்ணிலே மரணித்த பல்லாயிரம் மக்களையும் மாவீரர்களையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது. சிறப்பாக அங்கே வைக்கப்பட்ட முள்ளி வாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின் அங்கு வந்திருந்த மக்கள் அனைவரும் தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.
ஆரம்ப நிகழ்வுகளின் தொடர்ச்சியாக பாரதி கலைக்கூட ஆசிரியை திருமதி நிஷா பிருந்தாவன் அவர்களின் மாணவிகளான நிலக் ஷி கோகிலநிமலன், ரரபிஷா ரதிக்குமார் ஆகியோரின் வரவேற்பு நடனம் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

அணிவீரர்கள், நடுவர்கள் ஆயத்தமாகித் திடலுக்கு வந்ததும் போட்டிகள் காலை 10 மணிக்கு ஆரம்பமாகின. பார்வையாளர்களின் உற்சாக ஊக்கப்படுத்தலுடன் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்றன. ஒவ்வொரு அணியும் தங்களுடைய தனித்தன்மையை வெளிக்கொண்டு வரும் விதமாக மிகச் சிறப்பாக விளையாடின.
இச் சுற்றுப் போட்டியில் யேர்மன் நாடு தழுவியரீதியாக Tamil Dragon Neuss, TSV Ennepetal, Rot Weiß Hockstein Mönchengladbach, Hamm West, TSC Dortmund, Landau Tamillalayam, SC Warendorf ஆகிய 7 உதைபந்தாட்ட விளையாட்டுக் கழகங்கள் பங்குகொண்டன.

சுற்றுப்போட்டியின் முடிவில் முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலைகளை முறையே Rot Weiß Hockstein Mönchengladbach , TSC Dortmund, TSV Ennepetal ஆகிய கழகங்கள் பெற்று வெற்றிக்கிண்ணங்களைத் தமதாக்கிக் கொண்டன. இவர்களுக்கான மதிப்பளிப்புகளை யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு தர்மலிங்கம் இராஜகுமாரன் அவர்களும் சோலிங்கன் தமிழாலய நிர்வாகியும் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் செயற்பாட்டாளர் திரு குமாரசாமி நந்தகுமார் அவர்களும் Herrn Hassan Firouzkha அவர்களும் வழங்கிச் சிறப்பித்தனர். சிறந்த விளையாட்டு வீரராக(Man of the Match) சசிகுமார் (Rot Weiß Hockstein Mönchengladbach) அவர்களும் சிறந்த பந்துக் காப்பாளராக (Bester Torwart) ஆருத்ரா (TSC Dortmund) அவர்களும் அதிகூடிய இலக்கை அடைந்தவராக (Bester Torschütze) கெவின் (TSC Dortmund) அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுக்கான வெற்றிக் கிண்ணங்களை உதைபந்தாட்டப் பொறுப்பாளர் திரு கார்த்திகேசு ஜெயகரன் அவர்களும் ; Herrn Georg Schubert அவர்களும் திரு கந்தையா நீதிராசா அவர்களும் வழங்கி மதிப்பளித்தனர்.

இச் சுற்றுப் போட்டியில் நடுவர்களாக செயற்பட்டவர்கள் மிகச் சிறப்பாகச் செயற்பட்டிருந்தார்கள். இவர்களை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு சின்னையா நாகேஸ்வரன் அவர்கள் மதிப்பளித்தார்.
இறுதியாகத் தமிழீழத் தேசியக் கொடியினைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு சின்னையா நாகேஸ்வரன் அவர்கள் இறக்கி வைக்க, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும|; என்ற பாடலோடு போட்டி இனிதே நிறைவுபெற்றது.