மன்னார், மாந்தையில் ‘கள்’ விற்பனை நிலையத்தை இடமாற்ற கோரி மக்கள் போராட்டம்

202 0

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேட்டையா முறிப்பு கிராமத்தில் அமைந்துள்ள ‘கள்’ விற்பனை நிலையத்தை இடமாற்ற கோரி மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

அப்பகுதியில் உள்ள ‘கள்’ விற்பனை நிலையத்தினால் குடும்பங்களுக்குள் நிலவும் வன்முறைகள், சமூக சீர்கேடு, சிறுவர்கள் மது போதைக்கு அடிமையாவது போன்ற பிரச்சினைகளை கருத்திற்கொண்டு, பொறுப்பு மிகுந்த உரிய அதிகாரிகள் ‘கள்’ விற்பனை நிலையத்தை அப்பகுதியிலிருந்து அகற்றி, வேறோர் இடத்துக்கு இடமாற்றுமாறு கோரி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கள் விற்பனை நிலையத்தை மையமாக வைத்து அப்பகுதியில் வேறு போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகளும் மேற்கொள்ளபடுகின்றன என்றும் இதனால் கள்ளச் சாராயத்தின் விற்பனையும் அதிகரித்துள்ளது என்றும் அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனையடுத்து, அப்பகுதிக்கு சென்ற அடம்பன் பொலிஸாரின் உடனடி அழைப்பின் அடிப்படையில் குறித்த இடத்துக்கு வந்தடைந்த அடம்பன் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க முகாமையாளர் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததோடு, இன்று ஞாயிற்றுக்கிழமை (11) முதல் ‘கள்’ விற்பனை நிலையம் மூடப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், ‘கள்’ விற்பனை நிலையம் மூடப்படுவதனால் தங்களது வாழ்வாதாரம் முற்றுமுழுதாக பாதிக்கப்படுவதாக ‘கள்’ சார்ந்த தொழிலை நம்பி, அதனையே வாழ்வாதாரமாகக் கொண்டு இயங்கும் 10க்கும் மேற்பட்ட கள் சீவும் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கள் விற்பனை நிலையத்தை அகற்றுமாறு கோரி போராடுபவர்கள், கள் விற்பனைக்கு அல்லது கள் சீவும் தொழிலாளர்களுக்கு எதிராக நாங்கள் செயல்படவில்லை; இப்பகுதியில் உள்ள கள் விற்பனை நிலையத்தை வேறிடத்துக்கு மாற்றும்படி கோரிக்கை விடுத்தே போராடுகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.