கூவம், அடையாறு கரையோரங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க 150 இடங்களில் கண்காணிப்பு கேமரா நிறுவ திட்டம்

110 0

சென்னை மாநகரில் கூவம், அடையாறு கரையோரங்களில் குப்பை கொட்டுவதைத் தடுக்க150-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களை நிறுவத் திட்டமிட்டிருப்பதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகரப் பகுதியில் கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவை உள்ளன. மழைக்காலங்களில் தண்ணீரை வடியச் செய்வதில் இந்த நீர்வழித் தடங்களின் பங்கு அதிகம்.இந்நிலையில், இந்த ஆறுகள் ஆக்கிரமிப்புகளில் சிக்கி, குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுமிடமாக மாறியுள்ளன. ஆறுகளின் அகலமும் குறைந்துவிட்டது.

எனவே, ஆறுகளைப் பாதுகாக்க `சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை’ உருவாக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு, சுற்றுச்சூழல் மீட்டெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, கூவம், அடையாறு ஆகியவற்றின் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்திருந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அகற்றப்பட்டு, அவற்றில் வசித்து வந்த குடும்பங்களுக்கு, மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

அடுத்தகட்டமாக, ஆறுகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, அப்பகுதிகளில் கொட்டப்பட்டிருந்த குப்பை, கட்டுமானக் கழிவுகள் அகற்றப்பட்டன. மேலும், தொடர்ந்து குப்பை கொட்டாத வகையில் சுவர்கள் எழுப்பப்பட்டு, கம்பி வேலிகள் அமைக்கப்பட்டன.

பசுமைத் தீர்ப்பாயம்: எனினும், கூவம் ஆற்றின் கரையோரம் புதுப்பேட்டை, மின்வாரிய தலைமை அலுவலகம் பின்புறம், சிந்தாதிரிப்பேட்டை போன்ற பகுதிகளிலும், அடையாற்றின் கரையோரத்தில் சில இடங்களில் கதவுகளை உடைத்தும் சிலர் குப்பை, கட்டுமானக் கழிவுகளைக் கொட்டி வருகின்றனர்.

இது தொடர்பான வழக்குகள் பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன. தமிழகம் முழுவதும் திடக்கிழிவு மேலாண்மை விதிமீறல் தொடர்பான விவகாரத்தில் தலைமைச் செயலர் தலையிட்டு, உரிய தீர்வுகாண வேண்டும் என்றும், குப்பை கொட்டுமிடங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும் என்றும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையராக புதிதாகப்பொறுப்பேற்றுள்ள ஜெ.ராதாகிருஷ்ணன், பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்பு கூவம், அடையாறு கரையோரங்களில் குப்பை கொட்டப்படுவது தொடர்பாக அவர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆற்றங்கரைகளில் குப்பை கொட்டுவதைத் தடுப்பது தொடர்பாக, தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும்போது, “நீர்வழித் தடங்களைத் தூய்மையாகப் பராமரித்து,அப்பகுதியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல கோடி செலவிடப்பட்டுள்ளது. எனினும், ஆற்றங்கரையில் சிலர் குப்பை கொட்டி,நீர்நிலையையும், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இத்தகைய விதிமீறலில் ஈடுபடுவோரைக் கண்டறிய, 150-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களை நிறுவத் திட்டமிட்டுள்ளோம்.

மேலும், தேவையான இடங்களிலும் கூடுதலாக கண்காணிப்புக் கேமராக்களை நிறுவவும் முடிவு செய்துள்ளோம். விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்” என்றார்.