களுத்துறையில் கடும் மழையினால் வெள்ளப்பெருக்கு

62 0

களுத்துறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் திங்கட்கிழமை (05) பெய்த கடும் மழையினால் அப் பிரதேசங்களில் உள்ள வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரீட்சைக்கு செல்வதில் சிரமங்களை எதிர்கொண்ட கல்வி பொதுத் தராதர சாதரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்களை கடற்படையினர் படகுகள் மூலம் ஏற்றிச்சென்று பரீட்சைக்கு தோற்ற உதவினர்.

களுத்துறை மாவட்டம், பதுரலிய லத்பந்துர பகுதியில் திங்கட்கிழமை காலை ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக பெரும் சிரமத்தை எதிர்கொண்ட கல்விப் பொதுத்தராதர சாதாரண தர வகுப்பு மாணவர்களுக்கு கடற்படை நிவாரணக் குழுக்கள் உதவின. க.பொ.த பரீட்சைக்கு தோற்விருந்த மாணவர்களை ஏற்றிச் செல்ல கடற்படை படகுச் சேவையை வழங்கியது. மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைப் போக்குவதற்கும் கடற்படை நிவாரணக் குழுக்கள்  ஒத்தாசை புரிந்தன.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் சில பகுதிககளில் அதிகாலையில் தொழில்களுக்கு சென்ற மக்கள் மாலையில் வீடு திரும்புவதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கினர்.

அகலவத்தை குடலிகம ஊடாக ஹொரண வீதியில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. களு கங்கையின் கிளை நதியான கலக் கால்வாய் நிரம்பி வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுவதை அவதானிக்க முடிந்தது.

சில இடங்களில் நான்கு அடிக்கு தண்ணீர் இருந்தது. இதனால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மக்கள் வெள்ளநீரில் நடந்த செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இது இவ்வாறிருக்க, ஒரு மணித்தியாலத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.