தியாகி பொன் சிவகுமாரனின் தியாகம் வீண்போகாது

131 0

1970 ஆம் ஆண்டில் சிறிமாவே பண்டாரநாயக்கா ஆட்சி காலத்தில் கல்வி தரப்படுத்தலால் தமிழ் மாணவர்கள் பாதிக்கப்பட்டதையடுத்து அதனை மையமாக வைத்து ஆரம்பித்த போரட்டம் காரணமாக முதற் செயற்பாட்டாளராக செயற்பட்டு முதலில் சயனைடை உட்கொண்டு வீரமரணம் அடைந்த தியாகி பொன் சிவகுமாரன் முக்கிய இடத்தை பிடித்தவர் என்பது வரலாறு.

எனவே தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் வரை இப்படிப்பட்ட தியாகங்கள் ஒருபோதும் வீண் போகாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் கட்சி காரியாலயத்தில்  திங்கட்கிழமை (5) தியாகி பொன் சிவகுமாரன் 49 ஆவது நினைவேந்தல் இடம்பெற்றது.

இதில் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு அன்னாரது திரு உருவப் படத்திற்கு  மலர் மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் தூவி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள், இளைஞர்கள், யுவதிகள் வடகிழக்கில் சிங்கள காடையர்களால் கடத்தப்பட்டும் துன்புறுத்தல் செய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட காலப்பகுதியில் இவ்வாறு மாணவர் சமூதாயத்தை எவ்வாறு சீரழிக்கலாம் என அப்போதைய ஆட்சியாளர்கள் கல்வி தரப்படுத்தலை மேற்கொண்டபோது பொன் சிவகுமாரன் போராட்டத்தை ஆரம்பித்தார்.

தமிழ் மக்கள் பேரவையில் முதற் செயற்பாட்டாளராக செயற்பட்ட இவர் முதல் முதலில் சயனைட்டை உட்கொண்டு வீரமரணம் அடைந்து ஒவ்வொரு இளைஞர்கள் மத்தியில் தமிழ் உணர்வு புரட்சியை ஏற்படுத்தியவராக அவர் இன்று வரையும் திகழுகின்றார்.

ஒரு இனத்தினுடைய மாணவர்களுக்கு எதிராக இடம்பெறும் அடக்கு முறைக்கு எதிராக மாணவர்களின் எழுச்சியினால் எமது இனத்துக்கான விடுதலை பயணம் நடை பெற்றுவந்தது.

கல்வியை வைத்து நடைபெற்ற இந்தபோரிலே சிவகுமாரன் முக்கிய இடத்தை பிடித்தவர் என்பது வரலாறு என்பதுடன் இந்த தியாகி சிவகுமாரனை அடிப்படையாக வைத்துக் கொண்டே இதுவரைக்கும் தமிழ் மக்களின் இனவிடுதலைக்காக  ஆயுதம் ஏந்திய அத்தனை இளைஞர்களும் அத்தனை போராட்ட இயக்கங்களும் உருவெடுக்க  உந்துதலாக இருந்தது.

அவர் இறக்கும் போது தமிழ் இனத்துக்காக மீண்டும் பிறப்பு எடுத்து விடுதலையை பெற்றுக் கொள்வேன் என்றார் அந்தடிப்படையில் எத்தனையோ இளைஞர் யுவதிகள் ஆயுதம் ஏந்தி தமிழ் மக்களின் இனப் பிரச்சனையை உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளதுடன் தமிழ் மக்களுக்கு இன்றுவரை விடுதலை கிடைக்கவில்லை. ஆனால் விதைக்கப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு மாவீரர்களின் தியாகங்கள் விதையாக இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் வரை இப்படிப்பட்ட தியாகங்கள் ஒருபோதும் வீண் போகாது என்பதுடன் எந்த அரசியல் நோக்கத்துக்காக எமது இனம் போராடியதோ அந்த அரசியல் பணியை தொடர்ந்து செய்வதற்காக பல்வேறுபட்டவகையில் இந்த போராட்டம் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றதுடன் அந்த வரலாற்றின் அடிப்படையில் அந்த பணியை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வோம் என்றார்.