தனது ஆடைகளை தைக்காமல் காலம் கடத்திய தையல்காரரிடம் ஆடையை திருப்பிக் கேட்ட புது மணமகன் மீது தும்புத்தடி தாக்குதல்

98 0

திருமணத்துக்காக ஆடை தைக்க கொடுத்த துணிகளை, திருமணம் முடிந்தும் தைத்துக் கொடுக்காத தையல்காரரிடம் ஆடைகளை திருப்பிக் கேட்ட மணமகனை தையல்காரர் தாக்கிய சம்பவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் வெள்ளிக்கிழமை (2) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சாவகச்சேரி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது திருமணத்துக்காக அப்பகுதியில் உள்ள தையலகம் ஒன்றில் ஆடைகளை தைக்கக் கொடுத்திருந்தார்.

தையல்காரர் ஆடைகளை சொன்ன திகதிக்கு தைத்துக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், இளைஞனுக்கு திருமணம் நடந்து முடிந்துவிட, அதன் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை தனது மனைவியுடன் சென்று தைக்கக் கொடுத்த ஆடைகளை வாங்கி வருவதற்காக தையலகத்துக்கு இளைஞர் சென்றுள்ளார். அப்போதும் அவரது ஆடைகள் தைக்கப்படவில்லை.

அதனால் இளைஞனுக்கும் தையல்காரருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து, கடையில் இருந்த தும்புத்தடியினால் இளைஞனை அவரது மனைவி முன்னிலையி‍லேயே தையல்காரர் தாக்கியுள்ளார்.

இதன்போது காயமடைந்த இளைஞன் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றபோது, தன்னையும் இளைஞன் தாக்கியதாக தெரிவித்து தையல்காரரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதி பெற்றுள்ளார்.