நாட்டை குழப்பியது யார்?

165 0

ராஜபக்ஷர்கள் இனி நாட்டை குழப்புவதற்கு இடமளிக்க போவதில்லை என்ற நிலைப்பாட்டிலா ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

கடன் பெறுவதை தவிர பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களை ஜனாதிபதி முன்வைக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினரும் சுதந்திர மக்கள் சபையின் தலைவருமான டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (02)இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போது நாட்டை இனி குழப்புவதற்கு எவருக்கும் இடமளிக்க போவதில்லை என குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 40 ஆண்டுகாலம் பாரளுமன்ற உறுப்பினராகவும் ஆறு தடவைகள் பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.ஆகவே கடந்த பாதையை ஜனாதிபதி மீட்டுபார்க்க வேண்டும்.

ராஜபக்ஷர்கள் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மீண்டும் நாட்டை குழப்புவதற்கு இடமளிக்க போவதில்லை என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி அந்த கருத்தை குறிப்பிட்டாரா என்று எண்ண தோற்றுகிறது.தவறான தீர்மானங்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியதை மக்கள் மறக்கவில்லை.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீண்டு 2048 ஆம் ஆண்டு நாட்டை கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

இவ்வாறான எதிர்ப்பார்ப்பு மிக்க வார்த்தைகளை அவர் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் குறிப்பிட்டார்.தேர்தல் மேடைகளில் குறிப்பிட்ட வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.

பொருளாதார மீட்சிக்கு கடன் பெறுவதை தவிர்த்து வேறு எந்த திட்டமும் ஜனாதிபதியிடம் கிடையாது.எந்த நாட்டில் கடன் பெறுவது என்பதே பிரதான பொருளாதார கொள்கையாக காணப்படுகிறது.

விவசாயத்துறை,தேசிய உற்பத்திகள் வீழ்ச்சியடைந்த பின்னணியில் தான் பொருளாதாரப் பாதிப்பு தீவிரமடைந்தது.வீழ்ச்சியடைந்த தேசிய உற்பத்திகளை மேம்படுத்த நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டத்தையும் அரசாங்கம் செயற்படுத்தவில்லை என்றார்.