யாழ். மகாஜன கல்லூரி ஆசிரியரின் மூர்க்கத்தனமான தாக்குதல்!

72 0

யாழ்ப்பாணம் – வலிகாம வலயத்திற்கு உட்பட்ட மகாஜன கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரால் அதே பாடசாலையைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், அதில் இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஆசிரியர் மூன்று மாணவர்களை அழைத்து அவர்களின் தலை முடி தொடர்பில் வினாவிய பின் அவர்களை கையால் தாறுமாறாகத் தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.

ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளான ஒரு மாணவன் மூக்கால் இரத்தம் வடிந்த நிலையிலும், மற்றைய மாணவன் மயக்கமுற்ற நிலையிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவனின் தந்தை கூறுகையில், என்ன காரணத்துக்காக குறித்த ஆசிரியர் தன்னை அழைத்தார் என்பது தனக்கு தெரியாது என எனது மகன் கூறியுள்ளார்.

அத்துடன் திடீரென கைகளால் முகம் தலைப் பகுதிகளை ஆசிரியர் தாக்கியதாகவும் மகன் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்ல, குறித்த ஆசிரியர் மன நோயால் பாதிக்கப்பட்டவர் எனத் தான் அறிந்ததாகவும் இவ்வாறான ஆசிரியரை பாடசாலையில் வைத்திருப்பது ஏனைய மாணவர்களுக்கும் அச்சுறுத்தலாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே மனநோய் உள்ள ஆசிரியர் ஒருவரைப் பாடசாலையில் வைத்திருப்பது தொடர்பில் உரியவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.