சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ-வுக்கு மன்னார்குடியில் நினைவு சின்னம் ஏன்?

41 0

மன்னார்குடியில் லீ குவான் யூ-வுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு மன்னார்குடி பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு சிங்கப்பூர் தமிழ்ச்சங்கங்களுடன் இணைந்து நடந்த தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது ‘சிங்கப்பூரின் தந்தை’ என போற்றப்படும் மறைந்த பிரதமர் லீ குவான் யூவுக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னமும், நூலகமும் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். லீ குவான் யூவுக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

தமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்து: 1965-ம் ஆண்டு மலேசியாவில் இருந்து பிரிந்து சிங்கப்பூர் தனி நாடானது. 716 சதுர கி.மீ பரப்பளவு உடைய சிங்கப்பூரில், சீனர்கள், மலேசியர்கள், இந்தியர்கள்தான் அதிகளவு இருந்தனர். இவர்களை வைத்துக் கொண்டு சிங்கப்பூருக்கு சர்வதேச அங்கீகாரம் பெற, அந்நாட்டின் முதல் பிரதமரான லீ குவான் யூ, சட்ட திட்டங்களை வகுத்து, நாட்டை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டார்.

மேலும், இங்கு தமிழர்களின் பங்களிப்பை லீகுவான்யூ நன்கு உணர்ந்திருந்தார். அதன் காரணமாகவே சிங்கப்பூரில் தமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்தையும் வழங்கினார். சட்ட திட்டங்கள் கடுமையாக இருந்தாலும், உழைப்புக்கு உரிய மரியாதையும், ஊதியமும் கிடைத்த நிலையில் தமிழர்கள் சிங்கப்பூருக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் வேலைக்கு செல்வதை பெருமையாக கருதினர்.

இதனால், மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, ஆலங்கோட்டை, கண்டிதம்பேட்டை, மேலநத்தம், கீழத்
திருப்பாலக்குடி, மேலத்திருப்பாலக்குடி, மகாதேவப்பட்டினம், தெற்குசீதாரம், வடக்குசீதாரம், நெடுவாக்கோட்டை, தளிக்கோட்டை, தஞ்சை மாவட்டம் மதுக்கூர், பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றனர். அதன் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தையும் உயர்த்திக்கொண்டனர்.

இந்த கிராமங்களில் இன்றளவும் வீட்டுக்கு ஒருவராவது சிங்கப்பூரில் பணியாற்றி வருகின்றனர். பலர் சிங்கப்பூர் குடியுரிமையும் பெற்றுள்ளனர். இதனிடையே, 2015 மார்ச் 23-ல்
லீ குவான் யூ மறைந்தபோது, இரங்கல் தெரிவிக்கும் வகையில் மன்னார்குடியில் நடைபெற்ற அஞ்சலி பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது, ‘மண் வீட்டில் வசித்த
எங்களை மாடி வீட்டில் வசிக்க வைத்த தெய்வமே’ என அஞ்சலி பதாகைகளையும் வைத்தனர். மேலும், மன்னார்குடியில் லீ குவான் யூ-வுக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.

அப்போது எம்எல்ஏவாக இருந்த தற்போதைய அமைச்சர் டிஆர்பி.ராஜா, இந்த கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார். இந்நிலையில், லீ குவான் யூ-வுக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என சிங்கப்பூரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளது மன்னார்குடி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.