சஜித் கேள்வி ; பிரதமர், சபை முதல்வர் மௌனம்

45 0

அரச நிதி தொடர்பான தெரிவுக் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வாவை  நியமிக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள நிலையில் அதனை செயற்படுத்தாத பிரதமரே  தற்போது உள்ளார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலை ஏன் செயற்படுத்த முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் தினேஷ் குணவர்தனவை நோக்கி கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் பிரதமர் சபையில் அமைதியாக இருந்தார்.

தெரிவுக் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வாவை நியமிப்பதற்கு ஆளும் தரப்பினர் உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள் என ஆளும் தரப்பின் பிரதம கோலாசான் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற அமர்வு வியாழக்கிழமை (25) இடம்பெற்ற போது விசேட கூற்றை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் உரையாடிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றியதாவது,

அரச நிதி தொடர்பான தெரிவுக் குழுவின் தலைவர் நியமனம் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது.குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியிலும் அரசாங்கத்துக்கு சார்பானவரை நிதி தொடர்பான  தெரிவுக் குழுவின் தலைவராக நியமித்து எவ்வாறு சிறந்த முறையில் செயற்பட   முடியும் .ஆகவே அரச நிதி தொடர்பான தெரிவுக்குழு தலைவர் விவகாரம் தொடர்பில் இனி பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதில்லை என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஆளும் தரப்பின் பிரதம கோலாசான்  பிரசன்ன ரணதுங்க அரச நிதி தொடர்பான தெரிவுக்குழு நியமனம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில்  அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கபீர் ஹசீம்,ஹர்ஷ டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

அரச நிதி தொடர்பான தெரிவுக் குழுவின் தலைவர் பதவியை ஹர்ஷ டி சில்வாவுக்கு வழங்க தெரிவு குழுவின் ஒருசில உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.

அவரது செயற்பாடு முறையற்றது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.ஆகவே இந்த பிரச்சினை தொடர்பில் தீர்மானம் எடுக்க இணக்கமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.

எதிர்க்கட்சியினர் பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ளாமல் இருப்பது பிரச்சியைல்ல, எதிர்க்கட்சித் தலைவர் இரகசியமான முறையில் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் லக்ஷ்மன் கிரியெல்ல  தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் தெரிவுக் குழுவுக்கு தலைவரை நியமிக்காமல் இருக்க முடியும் என்பது முறையற்ற அவ்வாறான ஏற்பாடுகள் ஏதும் நிலையியல் கட்டளையில் இல்லை.ஆளும் தரப்பு கோலாசான் காட்டு சட்டத்தை குறிப்பிடுகிறார் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரச நிதி தொடர்பான தெரிவுக்குழு ஆரம்பத்தில் எவ்வாறு இயங்கியது,தற்போது எவ்வாறு இயங்குகிறது என்பதை நீங்கள் (சபாநாயகர்) அறிவீர்கள்.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் ஹர்ஷ டி சில்வா பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவி வகித்துக் கொண்டு ஹர்ஷ டி சில்வா எடுத்த நடவடிக்கைகளினால் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் பொறாமை கொண்டார்கள்.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.அரச நிதி தொடர்பான நிதி தெரிவுக் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வாவை நியமிக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலை கூட செயற்படுத்தாத பிரதமரா உள்ளார்,ஜனாதிபதியின் அறிவுறுத்தலை ஏன் செயற்படுத்த முடியாது என பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்க ஆளும் தரப்பின் கோலாசான் பிரசன்ன ரணதுங்க முற்பட்ட போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர்  ஜனாதிபதியுடனான கூட்டத்தில் நீங்கள் கலந்துக் கொள்ளவில்லை பிரதமர், சபை முதல்வர்  ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

ஆகவே பிரதமர் பதிலளிக்கட்டும் என்றார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தார்.