அலி சப்ரி ரஹீமிற்கு குறைந்தபட்ச தண்டபணம் விதித்தது ஏன் ?

68 0

3,5 கிலோ கிராம் தங்கம் மற்றும் 96 ஸ்மார்ட்  கையடக்க தொலைபேசிகளை சட்டவிரோதமாக  நாட்டுக்கு கொண்டு வந்த குற்றத்தை ஏற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு ஆகக்குறைந்த தண்டம் விதிக்கப்பட்டது ஏன்?புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இருக்கும் அவரின் பதவி பறிக்கப்படுமா என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற   நிதி ஒழுங்குபடுத்தல் கட்டளைகள்  தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய 3,5 கிலோ தங்கம் மற்றும் 96 ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் ஆகியவற்றை  சட்டவிரோதமாக கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக கொண்டு வந்த குற்றத்தை  பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஏற்றுக்கொண்டார்.அதனால்தான் அவருக்கு 75 ரூபா தண்டம்  விதிக்கப்பட்டது.

அரசு அவருக்கு உதவவில்லை அதனால் அரசுக்கு  எதிராக வாக்களித்தேன்  என அவர் கூறியதையிட்டு  அரசாங்கம் என்ற  வகையில் நாம் பெருமையடைகின்றோம் என குறிப்பிட்டார்.

இதன் போது குறுக்கிட்ட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார.3,5 கிலோ கிராம் தங்கம் மற்றும் 96 தொலைபேசிகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த குற்றத்துக்காக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு  75 இலட்சம் ரூபாவே தண்டம் விதிக்கப்பட்டது.

மிகவும் குறைவானது.சுங்க சட்டத்தின்படி கொண்டு வந்த பொருட்களின் பெறுமதியை விடவும் 3 மடங்கு அதிக தண்டம் அறவிடப்பட வேண்டும் .ஆனால்  அப்படி  நடைபெறவில்லை என்றார்.

இதற்கு பதிலளித்த  பதில் நிதி அமைச்சரான ரஞ்சித் சியம்பலாபிட்டிய,தண்டப்பணத்தில் ஆகக்கூடிய தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவரை சட்டவிரோதமாக பொருட்களை கொண்டு வந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டப்பணத்தில் அலி சப்ரி ரஹீமிற்கு விதிக்கப்பட்ட தண்டப்பணமே இலங்கை  சுங்க வரலாற்றில் அதிகூடிய  தொகையாக கருதப்படுகிறது என்றார்.

இதன்போது எழுந்த பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்  அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்து விட்டார் என்பதற்காக அவரை எதிர்க்கட்சியாக்க வேண்டாம்.

அப்படிப்பட்டவர் எமக்கு தேவையும் இல்லை. அவர் இப்போதும் அரசாங்கத்தின்  பிரதிநிதியாக புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக செயற்படுகின்றார். அவரின் அந்த பதவி தொடருமா ?என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த  பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய,இவ்விடயம் தொடர்பில் சபாநாயகர் ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுப்பார் என்றார்.