சிறு மழைக்கே தாங்காமல் கேலரி கூரை இடிந்த விவகாரம்: பாளை. வ.உ.சி. மைதானத்தில் வல்லுநர் குழு ஆய்வு

115 0

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் கேலரிகளின் மேற்கூரை அரைமணி நேர மழைக்கு தாக்குப்பிடிக்காமல் சாய்ந்து விழுந்தது தொடர்பாக சென்னையிலிருந்து வந்திருந்த அதிகாரிகள் மற்றும் வல்லுநர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மைதான கட்டுமானப் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரருக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாளையங்கோட்டையிலுள்ள வ.உ.சி. மைதானம் திருநெல்வேலி யின் முக்கிய அடையாளமாக உள்ளது. இங்கு விளையாட்டு போட்டிகள் மட்டுமின்றி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினம், குடியரசு தின விழாக்கள் உள்ளிட்ட அரசு விழாக்களும் நடத்தப்படுகின்றன. இந்த மைதானம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.14 கோடியில் புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு தொடங்கிய இப்பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. மைதானத்தில் காலரிகளுக்குமேல் புதிதாக கூரைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மைதானத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்திருந்தார்.

கூரைகள் சரிந்தன: இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகலில் பலத்த காற்றுடன் அரைமணி நேரம் பெய்த மழைக்கே தாக்குப்பிடிக்காமல் இந்த மைதானத்தின் மேற்குப்புறத்தில் இருந்த கூரைகளின் இரும்பு தூண்கள் உடைந்து கூரைகள் சரிந்து விழுந்தன. அப்போது ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவிதங்கள் நிகழவில்லை.

இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மைதான கட்டு மானப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர், அதிகாரிகளின் அலட்சியத்தால் கூரை சரிந்து விழுந்ததாகவும், ரூ.14 கோடியில் நடந்த புதுப்பிக்கும் பணியில் முறைகேடுகள் நடைபெற்றுள்ள தாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் பதிவிடப்பட்டு வருகிறது.

வல்லுநர் குழு ஆய்வு: இந்நிலையில் சென்னையி லிருந்து வந்த அண்ணா பல்கலை க்கழக வல்லுநர் குழுவினர் வ.உ.சி. மைதானத்தில் ஆய்வு மேற்கொண் டனர். அவர்களுடன் நகராட்சி நிர்வாகத் துறையின் தலைமைப் பொறியாளர் பாண்டுரங்கன் தலைமையில் வந்த அதிகாரிகள் குழுவினரும் கேலரி முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர். மீதமுள்ள அனைத்து மேற்கூரைகளும் உறுதி தன்மையுடன் இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

ஆய்வு அறிக்கை சமர்ப் பிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின்போது கேலரிகள் அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரரின் பொறியாளர்களும் உடனிருந்தனர்.

இதற்கிடையில் குறுகிய காலத்தில் மேற்கூரை சரிந்து விழுந் துள்ளதால் அதை சீரமைப்பதற்கான முழு செலவையும் ஒப்பந்ததாரர் ஏற்க வேண்டும் என்றும், இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் திருநெல்வேலி மாநகர ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். கூரை விழுந்ததற்கான காரணங்களை அறிக்கையாக 7 நாட்களுக்குள் சமர்ப்பித்து நிபுணர் குழுவிடம் ஆஜராக வேண்டும் எனவும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக, மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்: பாளையங்கோட்டை வ.உ.சி. மைதான கேலரி மேற்கூரை விழுந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இது தொடர்பாக அதிமுக மாவட்டச் செயலாளர் கணேச ராஜா தலைமையில் அக் கட்சியினர் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ண மூர்த்தி யிடம் அளித்த மனு: பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் பயன்பாட்டுக்கு வந்த சில மாதங்களிலேயே விழுந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளும்போது அரசு அதிகாரிகள் உரிய கண்காணிப்பை மேற்கொள்வதில்லை. தரமான பொருட்களை பயன்படுத்தாமல் அரசை ஏமாற்றும் மற்றும் நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய பணிகளை மேற் கொண்டுள்ளனர். இது சட்டப்படி குற்றமாகும்.

இதற்கு காரணமானவர்களிடம் இருந்து நஷ்ட தொகையை வசூல் செய்ய வேண்டும். வ.உ.சி. மைதான த்தில் தற்போது எஞ்சியுள்ள கூரைகளின் தரத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். கூரைகள் விழுந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர் மற்றும் அரசு பொறியாளர்கள் மீது குற்ற நடவடிக்கையும், துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் க. ஸ்ரீராம் வெளியிட்ட அறிக்கை: மாவட்ட நிர்வாகம் இச் சம்பவம் குறித்து உடனடியாக விசார ணைக்கு உத்தரவிட வேண்டும். இதற்கு பொறுப்பான அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். புதிதாக திருநெல்வேலி மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள, கட்டி வருகின்ற பாளையங்கோட்டை பேருந்து நிலையம், வணிக வளாகங்கள், சந்திப்பு பேருந்து நிலையம் ஆகிய வற்றை ஆய்வுக்கு உட்படுத்தி மக்களின் அச்சத்தை போக்கிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.