குஜராத் படகு மூலம் தூத்துக்குடி பகுதிக்கு வந்த 6 பேரையும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
கேரள மாநிலம் கொச்சி கடல் பரப்பில் கடந்த வாரம் கடலோர காவல்படையினர் மற்றும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் இணைந்து ஒரு கப்பலை மடக்கி சோதனை செய்தனர். அந்த கப்பலில் இருந்து ரூ.15 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2 ஆயிரத்து 525 கிலோ ‘கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன்’ என்ற போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த கப்பலில் இருந்து இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு போதை பொருள் விநியோகம் செய்ய இருந்தது தெரியவந்தது.
வேறு ஏதேனும் படகுகளில் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு உள்ளதா, அந்த கப்பல் கண்டறியப்பட்ட பகுதிகளில் சந்தேகப்படும்படியாக ஏதேனும் சிறிய படகுகள் நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து, நவீன தொழில்நுட்ப உதவியுடன் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, குஜராத்தை சேர்ந்த ஒரு பழைய மீன்பிடி படகு சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்து சென்றது தெரியவந்தது. அந்தப் படகு குஜராத்தில் இருந்து புறப்பட்டு கொச்சி, கன்னியாகுமரி, தூத்துக்குடி வழியாக சென்றது. இந்த படகை சென்னை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு ஆய்வாளர் அருண்குமார் தலைமையிலான அதிகாரிகள் தருவைகுளத்துக்கு வரவழைத்து மடக்கி பிடித்தனர்.
படகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்த, சென்னையில் இருந்து கூடுதலாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் வந்தனர். 6 பேரும் வந்த படகில் கோதுமை மாவு, வெங்காய மூட்டைகள் மட்டுமே இருந்தன. சட்டவிரோத பொருட்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் அந்த படகு தொடர்ந்து தருவைகுளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. கைதான 6 பேரையும் நேற்று முன்தினம் இரவு போலீஸார் வேன் மூலம் சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

