மத்திய மந்திரியிடம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி தமிழர்கள் மனு

240 0

அமெரிக்கா சென்ற மத்திய மந்திரியிடம், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி அங்கு வாழும் தமிழர்கள் மனு கொடுத்தனர்.

அமெரிக்கா சென்ற மத்திய மந்திரியிடம், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி அங்கு வாழும் தமிழர்கள் மனு கொடுத்தனர். அவர்களிடம் தமிழக அரசு தான் இந்த திட்டத்துக்கு இடம் கொடுத்தது என்று மத்திய மந்திரி குற்றம்சாட்டினார்.

புதுக்கோட்டை நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைநகரமாக விளங்கும் ஹூஸ்டன் நகருக்கு பெட்ரோலிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், ஒப்பந்தங்களுக்காகவும் மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் சென்றுள்ளார்.

அவரை அங்கு வாழும் தமிழர்கள் பெருமாள், பாலாஜி, நீல் ஆம்ஸ்ட்ராங், சுனில், சத்யா மற்றும் ராஜா ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது மத்திய மந்திரியிடம், தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி ஒரு மனுவை வழங்கினர்.

மனுவை பெற்றுக்கொண்ட மத்திய மந்திரி, அவர்களிடம் ‘ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு தான் இடங்களை தேர்வு செய்து தந்தது. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் அரசை தடுக்கவில்லை. நீங்கள் உங்கள் மாநில அரசை தான் கேட்க வேண்டும். எங்களுக்கு மாநில அரசு கொடுத்த இடத்தை தான் நாங்கள் கையகப்படுத்தியுள்ளோம். இந்தியாவில் எரிவாயு, பெட்ரோலியத்துறையில் எந்தவித விபத்துகளும் ஏற்பட்டதில்லை. பிரத்தியேகமான தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறோம். ஆகவே பாதுகாப்பு குறித்தோ, பாதிப்புகள் குறித்தோ அச்சம் தேவையில்லை’ என்றார்.

இதைக் கேட்ட அமெரிக்க வாழ் தமிழர்கள் ‘எரிவாயு நிறுவனங்களால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை நன்றாக அறிந்து வைத்துள்ளோம். அரசியல்வாதிகளுக்கு இந்த திட்டத்தின் பாதிப்புகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்தின் நீர் ஆதாரத்தை பாழ்படுத்தும், விவசாயத்தை அழிக்கும். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். சுற்றுச்சூழல் மாசுபடும். ஆகவே மத்திய அரசு தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடவேண்டும்’ என்று மத்திய மந்திரியிடம் வலியுறுத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து அவர்களிடம் மத்திய மந்திரி பேசும்போது, ‘ஹூஸ்டன் நகரில் தமிழர்களிடம் இருந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு வந்ததை என்னால் நம்பமுடியவில்லை. உங்களின் நேர்மையான கோரிக்கையை பாராட்டுகிறேன். என்னால் முடிந்ததை செய்ய முயற்சிக்கிறேன்’ என்றார்.

அவர்கள் கொடுத்த விரிவான தகவல்கள் அடங்கிய கோரிக்கை மனுவையும் மத்திய மந்திரி தன்னுடன் எடுத்துச் சென்றார்.