அமைச்சரவையை விரிவுபடுத்துவது அவசியமற்றது!

61 0

அமைச்சு பதவிகளுக்காக எதிர்க்கட்சியினர் ஆளும் தரப்புக்கு வருவதும், அமைச்சு பதவி இல்லை என ஆளும் தரப்பினர் எதிர் தரப்புக்கு செல்வதும் முறையற்றதொரு செயற்பாடாகும். நிபந்தனையற்ற வகையில் ஆதரவு வழங்குபவர்களை மாத்திரம் அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த போது அரசாங்கத்துடன் ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கு பலமுறை அழைப்பு விடுக்கப்பட்ட போது எவரும் முன்வரவில்லை.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறுகிய காலத்துக்குள் பொருளாதார பாதிப்புக்கு தற்காலிக தீர்வினை பெற்றுக் கொடுத்துள்ளார்.

நாடு இயல்பு நிலைக்கு  திரும்பியதன் பின்னர் எதிர்க்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் ஒன்றிணைய அவதானம் செலுத்தியுள்ளார்கள்.

அமைச்சு பதவிகளுக்காக எதிர்க்கட்சியினர் ஆளும் தரப்புக்கு வருவதும்,அமைச்சு பதவிகள் இல்லாத காரணத்தால் ஆளும் தரப்பினர் எதிர்க்கட்சி பக்கம் செல்வதும் முறையற்றதாகும்.

நாடு பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பின்னணியில் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களை விரிவுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அரச நிதி அரசியல்வாதிகளை நிர்வகிப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிறது என மக்கள் குற்றஞ:சாட்டுவது உண்மை என்ற நிலையை அரசாங்கம் தோற்றுவிக்க கூடாது.

அமைச்சு பதவிகளுக்காக அரசாங்கத்தில் ஒன்றிணைய எதிர்பார்த்துள்ளவர்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்த வேண்டும்.நிபந்தனையற்ற வகையில் ஆதரவு வழங்கும் தரப்பினரை மாத்திரம் அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.