அமைச்சர் ஹக்கீமின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்தார் அமைச்சர் விஜித விஜய்முனி சொய்சா

247 0

நாச்சியாதீவு கால்வாயை திருத்தியமைக்குமாறும் அது தொடர்பிலான பூரண விபரங்களை தனக்கு வழங்குமாறும் நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜய விஜிதமுனி சொய்சா நீர்ப்பாசனத்துறை அமைச்சின் அனுராதபுர மாவட்டத்திற்கு பொறுப்பான உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

நீர்ப்பாசன அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கும் நீர் வழங்கல் அமைச்சின் உயர் அதிகாரிகளுக்குமிடையிலான உத்தியோக பூர்வமான சந்திப்பு பாராளுமன்ற கட்டிடத்தொகுதியுள்ள அமைச்சர் விஜய விஜித முனி சொய்சாவின் பிரத்தியேக அறையில்  அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் நடைபெற்றது. இதன் போதே இப்பணிப்புரை அமைச்சரினால் வழங்கப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அனுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாச்சியாதீவு மக்களின் அழைப்பின் பேரில் நாச்சியாதீவுக்கும் பயணம் செய்தார்.

இதன் போது நாச்சியாதீவு ஜும்ஆ பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் சி .அமீரான் மற்றும் உபதலைவர்களான ஏ .ஆர் .எம் . பர்வீன் , ஏ.ஏ .எம் .ரஸ்கான் ஆகியோரினால் நாச்சியாதீவு கால்வாய் தொடர்பில் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

மழைகாலத்தில் நாச்சியாதீவுக்குளத்திலிருந்து வெளியாகின்ற மேலதிக நீரை வெளியேற்றும்முகமாக நாச்சியாதீவு புதிய நகர் பிரதேசத்தில் மேலதிகமாக வெட்டப்பட்டதே இந்த கால்வாய் . கடந்த ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட இந்த கால்வாய் மக்கள் குடியிருப்பை ஊடறுத்து செல்வது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் சுமார் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெட்டப்பட்ட கொடவான் இருமருங்குகளிலும் கட்டப்படாமையினால் மழைகாலத்தில் மண்ணரிப்பு ஏற்படுகின்றது, இது கிராமத்தவர்களின் சொந்த நிலங்களை அரித்து செல்வதோடு, தோட்டப்பயிர் செய்கைக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு வீடுகளுக்கும் சிறியளவில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலை தொடருமானால் எதிர்காலத்தில் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த சொந்த நிலங்களை இழக்க நேரிடும்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களும்,பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையும் கடந்த நான்கு வருடங்களாக அரசியல் மட்டத்திலும்,அதிகாரிகள் மட்டத்திலும் முயற்சி செய்தும் எந்தப்பலனுமில்லை, அத்தோடு சில அரசியல் பிரமுகர்களின் சுயதேவைக்காகவே இந்த கால்வாய் உருவாக்கப்பட்டதாகவும், கால்வாய்க்கு மேலுள்ள பெருக்கு வெட்டை எனும் பகுதியில் சட்டவிரோத மண்அகழ்வினை பிரதேச அரசியல்வாதி ஒருவர் சொற்ப வருமானம் கருதி மேற்கொண்டமையும் இந்த கொடவான் உருவாவதற்கான காரணமாகும்.

என அந்த மகஜரில் சுட்டிக்காட்டாப்பட்டிருந்ததை மேற்கோள் காட்டி இந்த கொடவானின் இரண்டு பக்கமும் கட்டப்படவேண்டியதன் அவசியத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்அமைச்சர் ரவூப் ஹக்கீம் நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்து அமைச்சர் விஜித விஜய்முனி சொய்சாவுக்கு விளக்கினார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சின் பொதுமுகாமையாளர் சுனில் பெரேராவின் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதோடு விரைவாக இந்த கால்வாய் பிரச்சினைக்கு தீர்வினை பரிந்துரைக்குமாறும் . இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவ ஆவண செய்யுமாறும் அமைச்சர் விஜய விஜிதமுனி சொய்சா அந்தக்குழுவுக்கு பணித்தார்.

மக்களுக்கு நன்மை பயக்கின்ற விதத்தில் அரசாங்க அதிகாரிகளின் செயற்பாடுகள் அமையவேண்டும். அது மக்களை நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கான வழிவகைகளை செய்வதாக அமைய வேண்டும்.

நமது இலக்கும் செயற்பாடும் பொது மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அமைய வேண்டும் எனவே அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இந்த வேண்டுகோளை அவசரமாக நிறைவேற்றுங்கள் என அமைச்சர் விஜித விஜய்முனி சொய்சா அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார்.