உலகளாவிய தரத்திற்கு ஏற்ப அனர்த்த முகாமைத்துவத் துறையை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு படையணியின் உயர்மட்ட தூதுக்குழுவுடன் நேற்று புதன்கிழமை அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக அனர்த்த முகாமைத்துவ மையத்தை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய தரத்திற்கு ஏற்ப அனர்த்த முகாமைத்துவத் துறையை அபிவிருத்தி செய்ய விரும்புகிறோம்.
எனவே பேரிடர்களால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஆதரவளிக்கும் உலகளாவிய பதிலளிப்பாளராக பேரிடர் முகாமைத்துவ நிலையத்தை உருவாக்க உத்தேசித்துள்ளோம். இதற்கு முன்னுரிமையளித்துள்ளோம் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிவில் – இராணுவ ஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள இராஜாங்க அமைச்சர், இலங்கை இராணுவத்தை சரியான அளவில் பேணுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் செயல்திறனை அதிகரிக்க புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் இதன் போது வலியுறுத்தியுள்ளார்.
அனர்த்த நிலைமைகளின் போதான பயிற்சி மற்றும் உடன் பதிலளிப்புக்கள் என்பவற்றுக்கு அமெரிக்கா உதவும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு படையணியின் தலைமையதிகாரி மேஜர் ஜெனரல் ஜோன் பீ ரொனெக் தெரிவித்துள்ளார்.
சேதத்தை குறைக்க கட்டிடக் குறியீட்டை உருவாக்குவதன் முக்கியத்துவம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் மூலம் எச்சரிக்கை கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

