ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதி ஓரிரு நாளில் அறிவிப்பு

276 0

ஜெயலலிதா மரணத்தால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடக்கும் தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படுகிறது. அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.

ஜெயலலிதா மரணத்தால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடக்கும் தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படுகிறது. அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ந் தேதி காலமானார். அதனால், அவர் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பொதுவாக, ஒரு தொகுதி காலியாகி விட்டால், 6 மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதன்படி, ஆர்.கே.நகர் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள பாராளுமன்ற, சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் ஏற்பாடுகளை முடுக்கி விட்டது. காலியாக உள்ள பாராளுமன்ற தொகுதிகளின் பட்டியலை பாராளுமன்ற செயலாளரிடமும், சட்டசபை தொகுதிகளின் பட்டியலை மாநில சட்டசபைகளின் செயலாளர்களிடமும் கேட்டு கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியது. அந்த பட்டியல் தற்போது தேர்தல் கமிஷனுக்கு கிடைத்துள்ளது.

அதன்படி, ஆர்.கே.நகர் உள்பட நாடு முழுவதும் 12 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. பாராளுமன்ற தொகுதிகளை பொறுத்தவரை, காஷ்மீர் மாநிலம் அனந்தநாக், ஸ்ரீநகர், கேரள மாநிலம் மலப்புரம் ஆகிய 3 தொகுதிகள் காலியாக உள்ளன.

மேற்கண்ட 12 சட்டசபை தொகுதிகள் மற்றும் 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை ஓரிரு நாளில் தேர்தல் கமிஷன் அறிவிக்கிறது. அடுத்த மாத இறுதிக்குள் இவற்றுக்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்படும். இத்தகவலை தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இடைத்தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டு இருப்பதற்கு, ஜனாதிபதி தேர்தல் ஒரு முக்கிய காரணம் ஆகும். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதி முடிவடைகிறது. எனவே, அதற்குள் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில், பாராளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்களும், மாநில சட்டசபைகளின் எம்.எல்.ஏ.க்களும் ஓட்டு போடுவார்கள். அந்தவகையில், 776 எம்.பி.க்களும், 4 ஆயிரத்து 120 எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப்போட தகுதி உடையவர்கள் ஆவர்.மேற்கண்ட அனைவரும் ஓட்டு போடும்வகையில், பாராளுமன்ற, சட்டசபைகளில் எந்த காலியிடமும் இருக்கக்கூடாது என்று தேர்தல் கமிஷன் விரும்புகிறது. எனவே, அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடத்தி, காலியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது.