மலையக பிள்ளைகளின் கல்வி கனவை சிதைக்கும் வறுமை

133 0
image

13 வயது நிசாந்தினி தனது சீருடையை அணிந்து, காலையில் பாடசாலைக்குச் செல்லும்போது தான் இன்று பாடசாலைக்குச் செல்வது  நிச்சயமில்லை என எண்ணிக்கொண்டே போவது வழக்கமாகிவிட்டது.

சில நாட்கள் அவருக்கும் அவரது சகோதரனுக்கும் பஸ் கட்டணத்துக்காக கொடுக்க பணம் இருக்காது.

இப்படி பணம் இல்லாத நாட்களில் இரக்கமுள்ள பேருந்து சாரதி அல்லது நடத்துநர் குறைந்த கட்டணத்தில் அவர்களை அழைத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையிலேயே அந்த பெற்றோர் தமது இரு பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்புகின்றனர்.

 

 

 

 

சில நாட்களில் அவர்கள் பாடசாலைக்கு செல்வதே அப்படியான உதவிகள் மூலமாகத்தான் என தெரிவிக்கின்றார் நிசாந்தினியின் தந்தை மாரிமுத்து மகேஸ்வரன்

தன் பிள்ளைகள் தெரிந்த, பழக்கப்பட்ட பேருந்தில் சென்றால், ‘ஒவ்வொரு நாளும் பயணம் செய்யும் பிள்ளைகள்’ என்பதால் ஏனையவர்கள் உதவி செய்வார்கள் என்கின்றார் அவர்.

ஆனால், அதற்கு மாறாக, நிசாந்தினி கண்ணீருடன் திரும்பிவரும் நாட்களும் உள்ளன.

இலங்கையில் கடந்த வருடம் ஆரம்பமான பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை அனுபவித்த பெற்றோர்கள் தற்போதும் அதனை எதிர்கொண்டு வருகின்றனர். இச்சூழ்நிலை, அவர்களது பிள்ளைகளின் கல்வியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், மலையக தோட்டமொன்றில் வசிக்கும், காலங்காலமாகவே வறியவர்களாக வாழும் நிசாந்தினியின் பெற்றோர் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிசாந்தினியின் குடும்பத்தை பொறுத்தவரையில், இரு பிள்ளைகளுக்குமான பேருந்து கட்டணம் 50 ரூபாயிலிருந்து 140 ரூபாயாக அதிகரித்துள்ளது.

குடும்பத்தினருக்கு உணவு வழங்குவதற்கே கஷ்டப்படும் அந்த பெற்றோரால், இந்த பேருந்து கட்டணத்துக்கான செலவை ஏற்க முடியாதிருக்கிறது.

இலங்கையின் மத்திய மாகாணத்தில், ஹட்டனுக்கும் கொட்டகலைக்கும் இடையில் உள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறிப்பவர் நிசாந்தினியின் தாயார் சுப்பையா புஸ்பதேவி.

நாளாந்தம் ஆயிரம் ரூபாய் உழைப்பதற்கு அவர் 18 கிலோ தேயிலை கொழுந்தை பறிக்கவேண்டும்.

10 கிலோவுக்கு 500 ரூபாய் வழங்குவார்கள். இதை விட குறைந்த தொகைக்கு, கிலோவுக்கு 25 ரூபாய் வழங்குவார்கள்.

2021இல் உரங்களுக்கு குறுகிய காலத் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, தேயிலை உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சியும், அடிக்கடி பெய்த மழையும், ஏனைய காரணிகளும் புஸ்பராணியின் வருமானத்தை மோசமாக பாதித்துள்ளன.

இந்த மாதம் அவர் மூன்று நாட்கள் மாத்திரமே வேலைக்குச் சென்றுள்ளார்.

மகேஸ்வரன் ஒரு நாளாந்த கூலித் தொழிலாளி. கல் உடைப்பதன் மூலம் நாளாந்தம் 700 முதல் 1200 ரூபாய் வரை உழைக்கக்கூடியவர்.

இந்த நெருக்கடிகளை தொடர்ந்து நிசாந்தினியும் அவரது சகோதரனும் கடந்த வருடம் பல மாதங்கள் பாடசாலை கல்வியை இழந்திருந்தனர். இந்நிலையில், மீண்டும் கடந்த டிசம்பர் மாதமே பாடசாலைக்குத் திரும்பினர்.

எனினும், குடும்ப பொருளாதார நெருக்கடி காரணமாக அவர்களால் ஒழுங்காக பாடசாலைக்குச் செல்ல முடியவில்லை. இதனால் அவர்கள் பாடசாலையில் ஆசிரியர்களிடம் அடி வாங்கவேண்டிய நிலையும் காணப்பட்டது.

“நான் அடியை வாங்கிக்கொள்வேன்… ஆனால், எதுவும் சொல்லமாட்டேன்” என்கிறார் நிசாந்தினி.

“நாங்கள் கஷ்டப்படுகின்றோம் என கூறினால் அவர்கள் அதனை கணக்கெடுக்கமாட்டார்கள்” என அவர் தெரிவித்தார்.

இந்த இரு பிள்ளைகளுக்கும் பாடசாலைக்கு செல்வதில் மாத்திரமே பிரச்சினையில்லை.

பாடசாலையில் இவர்கள் மேசை, கதிரைகளை பெற்றுக்கொள்வதற்கான கட்டணத்தை பெற்றோர் செலுத்தவில்லை என்பதற்காக  நிசாந்தினிக்கு வகுப்பறையில் நிரந்தர இடமில்லை. அவருக்கென்று ஒரு கதிரையோ மேசையோ கொடுக்கப்படவில்லை.

வகுப்பறைக்கு யாரேனும் ஒரு மாணவர் சமுகமளிக்காதபோதே, நிசாந்தினி அந்த மாணவரின் கதிரையில் அமர்வது வழமை.

ஒன்பதாம் வகுப்பில் கல்வி கற்கும் அவரது சகோதரன் சுரேந்திரகுமார் 15 பாடங்களை கற்கின்றார். ஆனால், அவரிடம் ஆறு ஏழு கொப்பிகளே உள்ளன.

முன்னர், ஒரு கொப்பி 170 ரூபாயாக காணப்பட்டது. தற்போது அதன் விலை 300 ரூபாய் என்கின்றனர், அந்த குடும்பத்தினர்.

“எங்களிடம் போதியளவு அப்பியாச கொப்பியும் பென்சிலும் இல்லாவிட்டால் அனைத்து பாடங்களையும் எங்களால் படிக்க முடியாது” என தெரிவிக்கும் சுரேந்திரகுமார்,

“ஆசிரியர்கள் எங்களை அடிப்பார்கள். எங்களால் படிக்க முடியாது. ஏனையவர்கள் படிப்பதை பார்த்துக்கொண்டிருப்போம். நான் இந்த வருடம் பத்தாம் ஆண்டு படிக்கவேண்டும். ஆனால், என்னிடம் கொப்பி, பென்சில்கள் இல்லாவிட்டால் என்னை அடுத்த வகுப்புக்கு தரமுயர்த்தப் போவதில்லை என அவர்கள் கூறிவிட்டார்கள்” என சுரேந்திரகுமார் சொல்கிறார்.

மலையகத்தின் பெருந்தோட்ட பகுதிகளில் கல்வியை பெறுவது என்பது எப்போதும் பிரச்சினைக்குரிய விடயமாகவே காணப்படுகிறது. தலைமுறை தலைமுறையான வறுமையும் இதற்கு காரணம்.

தொலைதூர பகுதிகளில் பாடசாலைகள் அமைந்திருப்பதால் பிள்ளைகள் பாடசாலைகளுக்கு நடந்தே செல்லவேண்டிய நிலை காணப்படுகிறது.

சில தோட்டங்கள் தங்களுக்கு என ஒருசில பாடசாலைகளை கொண்டுள்ளன. எனினும், அங்கு வசதிகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

கூரைகள் ஊடாக மழைநீர் வழிந்தோடி பாடசாலை புத்தகங்களை நனைக்கிறது என கந்தப்பொல நகரத்தை சேர்ந்த மாணவியொருவர் தெரிவித்துள்ளார்.

அனேக பெற்றோர்கள் குறைந்தளவு கல்வியை மாத்திரம் கொண்டுள்ளவர்கள் என்பதாலும், அவர்கள் குறைந்த வருமானம் பெறுபவர்கள் என்பதாலும், பிள்ளைகளின் பாடசாலை மற்றும் கல்வித் தேவைகளை பூர்த்தி செய்வதா அல்லது பிள்ளைகளும் குடும்பத்தினரும் சாப்பிட வழி தேடுவதா என்ற இக்கட்டான நிலையில் வாழ்கின்றனர்.

பொருளாதார நெருக்கடி காலத்தில் இவர்களின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

நிசாந்தினியும் சுரேந்திரகுமாரும் சில நாட்கள் பாடசாலைக்கு உணவை கொண்டு செல்லாமல், சில நாட்கள் காலை உணவை உண்ணாமலே கூட செல்கின்றனர்.

“நான் சில தடவை மயக்க நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். நீங்கள் சாப்பிடவில்லையா என அவர்கள் கேட்பார்கள். நாங்கள் இல்லை என கூறுவோம். ஆசிரியர்கள் உணவு கொண்டுவந்திருந்தால், எங்களுக்கும் தருவார்கள்” எனவும் சுரேந்திரகுமார் கூறுகிறார்.

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவர்களில் 30 வீதமானவர்களுக்கு மூன்று வேளை உணவும் கிடைப்பதில்லை என்கிறார் பாடசாலை அதிபர் சித்திரன் ராஜன்.

“சிலர் பாடசாலைக்கு உணவை கொண்டு வருகின்றனர். ஆனால், காலையில் உணவு உண்ணாமல் தான் வருகின்றனர்” என தெரிவிக்கும் ராஜன்,

“எங்கள் மாணவர்களை பார்த்தீர்கள் என்றால்… அவர்களில் பலர் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அடிக்கடி நோய்வாய்ப்படுகின்றனர்.

தொடர்ந்து அரை மணித்தியாலம் ஒரு வேலையை செய்ய முடியாத நிலையில் மாணவர்கள் உள்ளனர்.

உணவு நெருக்கடி என்பது முன்னர் ஒரு பாரிய பிரச்சினையாக இல்லாமலிருந்தது. ஆனால், தற்போது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

உணவு செலவினங்கள் மாத்திரமல்ல, பெற்றோர்கள் மேலதிக வகுப்புகளுக்கு கட்டணம் செலுத்தவேண்டிய நிலையில் உள்ளனர். அத்தோடு அவர்களுக்கு ஏனைய செலவுகளும் உள்ளன.

நிசாந்தினி வசிக்கும் பகுதியில் வாழும் யொவான் (15) பேருந்துக்கு செலுத்துவதற்கான பணம் இல்லாதபோதெல்லாம் பாடசாலைக்கு செல்வதை தவிர்ப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார்.

பாடசாலைக்கு செல்லாமல் கல் உடைப்பது போன்ற வேலைகளில் யொவான் ஈடுபடுவதும் வழமை. இதனால் அவனுக்கு 500 ரூபாய் வரை கிடைக்கும்.

அந்த மாணவன் பாடசாலைக்கு பசியுடன் செல்வதுமுண்டு.

அவனது குடும்பம் மாதாந்த வாடகையான 5000 ரூபாயை செலுத்துவதற்கே பெரும் சிரமப்படுகிறது.

“எனது மகன் நன்றாக படிக்கிறான்; திறமைசாலி” என கண்ணீருடன் தெரிவிக்கிறார், யொகானின் தந்தை ஜேசுதாசன் டக்லஸ் கிறிஸ்டோபர்.

“எனக்கு கவலையாக இருக்கிறது. ஆனால், என்ன செய்ய முடியும்…! இதை விட நாங்கள் மரணிப்பதே சிறந்தது என சிலவேளை இரவுகளில் நான் நினைத்திருக்கின்றேன்.

எனது மனைவி ஒரு நோயாளி. ஆனாலும், அவருமே வேலைக்குச் செல்கிறார்” எனவும் அவர் தெரிவிக்கிறார்.

இது தொடர்பில் மத்திய மாகாணத்தின் மேலதிக கல்விப் பணிப்பாளர் கூறுகையில், மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் கல்வியின் நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது என்கிறார்.

பேருந்து கட்டணம் காரணமாக எல்லா பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்ப முடியாது என்பதால் ஒரு நாள் மாற்றி ஒருவரை அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றார் அவர்.

அவர் மேலும் கூறுகையில்,

2022/23இல் மத்திய மாகாணத்தில் சுமார் 500 மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைநடுவில் விலகியுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பெற்றோர்கள் நாளாந்த வருமானம் உழைப்பவர்கள். 80 வீதமானவர்கள் நாளாந்த வருமானம் உழைக்கின்றனர். ஏனையவர்களை விட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு இவர்களையே மோசமாக பாதித்துள்ளது.

பாடசாலை நிர்வாகம் மாணவர்களை மீண்டும் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. பெற்றோர்களுக்கு கடிதம் அனுப்பியது. ஆனால், அதிகளவு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் இல்லை.

பொருளாதார நெருக்கடி காரணமாக பல பெண்கள், தாய்மார்கள் கொழும்புக்கு சென்றுவிட்டனர். அல்லது மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்றுவிட்டனர். ஆண்கள் கடைகள் அல்லது கட்டுமான வேலைகளுக்கு சென்றுவிட்டனர் என்கிறார்.

மலையகத்தில் பல குடும்பங்களை பொறுத்தவரையில், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கனவுகளை தங்களின் வாழ்வாதாரத்துக்காக கைவிடவேண்டிய   நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ரஜீவன்