மத்திய வங்கியின் உத்தரவாதம் ஆறுதலளிக்கிறது என்கிறது இலங்கையிலுள்ள வங்கிகளின் கூட்டிணைவு

61 0

உள்ளகக் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையின்போது வங்கித்துறையின் உறுதிப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்று மத்திய வங்கி உத்தரவாதமளித்திருப்பது தமக்குப் பெரிதும் ஆறுதலளிப்பதாக இலங்கையிலுள்ள வங்கிகளின் கூட்டிணைவு தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டுக்கு அமைவாக உள்ளகக் கடன்மறுசீரமைப்பை மேற்கொள்ளும்போது உள்நாட்டு வங்கி மற்றும் நிதியியல் கட்டமைப்புக்களின் செயற்பாடுகள் பாதிக்கப்படும் என்று பல்வேறு தரப்பினராலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுவரும் பின்னணியிலேயே இலங்கையிலுள்ள வங்கிகளின் கூட்டிணைவு மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளது. அக்கூட்டிணைவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உள்ளகக் கடன்மறுசீரமைப்பு குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளின்போது வங்கித்துறையின் உறுதிப்பாடு அச்சுறுத்தலுக்குள் தள்ளப்படாது என்று வங்கித்துறையை ஒழுங்குபடுத்தும் அதிகாரம்பொருந்திய கட்டமைப்பான மத்திய வங்கி உத்தரவாதமளித்திருப்பது எமக்கு பெரிதும் ஆறுதலளிக்கின்றது.

கடன்மறுசீரமைப்பை மேற்கொண்டதன் பின்னர் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கக்கூடியவகையில் போதியளவிலான நிதியையும் திரவத்தன்மையையும் வங்கிகள் பேணவேண்டியது அவசியமாகும். அதனுடன் இணைந்ததாக கையிருப்பின் அளவு மற்றும் வரவு, செலவுத்திட்டப்பற்றாக்குறை ஆகியவற்றை சாதகமான மட்டத்துக்குக் கொண்டுவருவதற்கு ஏதுவான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதி தொடர்பான இறுதிக்கட்ட இணக்கப்பாட்டை அடைந்துகொள்வதற்கு மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட வலுவான முயற்சிகளை நாம் பாராட்டுகின்றோம். இந்த இணக்கப்பாடானது இவ்வாண்டில் சந்தை நிலைவரம் மற்றும் பொருளாதாரக்காரணிகள் என்பன மேம்பாடடைவதற்குப் பங்களிப்புச்செய்துள்ளது. அதேவேளை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதுடன் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட இறுக்கமான கொள்கைத்தீர்மானங்களும் பெரிதும் வரவேற்கப்படவேண்டியவையாகும்.

கையிருப்பு மற்றும் நிதியியல் மறுசீரமைப்புக்கள் தாமதமடையும் பட்சத்தில் பொருளாதாரமும் வங்கிக்கட்டமைப்பும் முகங்கொடுக்கக்கூடிய சவால்கள் மிகமுக்கியமானவையாகும். இவ்வாறானதொரு பின்னணியில் மத்திய வங்கியினால் வழங்கப்பட்டுள்ள உத்தரவாதத்தை அடிப்படையாகக்கொண்டு நாம் திருப்தியடைகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.