திருக்களூரில் நடந்துவரும் அகழாய்வு பணியில் ஏராளமான பொருட்கள் கண்டுபிடிப்பு

65 0

கடந்த 2020-ம் ஆண்டு நடந்த மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதனையடுத்து ஆதிச்சநல்லூரில் முதல்கட்டமாக அகழாய்வு பணிகள் கடந்த வருடம் தொடங்கி நடந்து வருகிறது.

தொடர்ந்து அருங்காட்சியக பணிகளும் நடந்து வருகிறது. இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் புதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிய ஆதிச்சநல்லூரைச் சுற்றியுள்ள திருக்களூர், அகரம், கொங்க ராயகுறிச்சி, ஆதிச்சநல்லூர், கருங்குளம் ஆகிய 5 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தனர். இதனையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் முதல் முறையாக வாழ்விடப் பகுதிகளை கண்டறிய திருக்களூரில் அகழாய்வு பணிகள் தொடங்கியது.

இதற்காக வரலாற்று கால கல்வெட்டுகளை கொண்ட சேர, சோழ, பாண்டீஸ்வரர் கோவில் அருகே பணிகள் தொடங்கியது. அகழாய்வு பணிக்காக 3 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதில் வரலாற்று காலம் முதல் இரும்பு காலம் வரையிலான மண்ணடுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மற்றுமொரு அதிசயமாக 20 செ.மீ. ஆழத்தில் 5 வரிசை கொண்ட சுடப்படாத மண் செங்கல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செங்கல்கள் 26 செ.மீ. நீளம், 18 செ.மீ. அகலம், 8 செ.மீ. உயரத்தில் கிடைக்கப்பட்டுள்ளது. மற்றொரு அகழாய்வுக் குழியில் 4 தரைத்தளங்கள் உள்ளது.

முதல் மற்றும் 2-ம் தரைத்தளங்களில் சுடுமண் குழாய்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 4-ம் தரைத் தளத்தில் அடுப்பு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்கு வரலாற்று காலம் முதல் இரும்பு காலம் வரையிலான பானை ஓடுகள் அதாவது சிவப்பு பானை, கருப்பு சிவப்பு பானை, மெருகேற்றப்பட்ட கருப்பு பானை, மெருகேற்றப்பட்ட சிவப்பு பானை மற்றும் பழுப்பு நிறப்பானை வகை ஓடுகள் கிடைக்கின்றன.

மேற்பரப்பு முதல் 2 மீட்டர் ஆழம் வரை பல வண்ணங்கள் கொண்ட பாசிகள் மற்றும் உடைந்த வளையல்கள் கிடைக்கப்பெறுகின்றன. பச்சை, சிவப்பு, கருப்பு, வெள்ளை ஆகிய வண்ணங்களிலும் வட்டம், உருளை, தட்டு ஆகிய வடிவங்களில் பாசிகள் உள்ளது. அதுமட்டுமின்றி இரும்பு பொருட்கள், செம்பு காசுகள் மற்றும் சுடுமண் உருவங்கள் கிடைத்துள்ளது.