கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் வரையில் போராட்டம் தொடரும்…… (காணொளி)

390 0

 

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் வரையில் போராட்டம் தொடரும் என கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் தங்களது காணிகளை விடுவிக்கக்கோரி கடந்த முதலாம் திகதி முதல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தொடர்ச்சியாக இரவு பகலாக இன்றும் தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 2009ம் ஆண்டு இப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து சென்ற மக்கள் முள்ளிவாய்க்கால் வரையும் சென்று செட்டிகுளம் மெனிக்பாம் முகாமில் தங்க வைக்கப்பட்டு கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மீள்குடியேற்றம் என்ற பெயரில் அழைத்து வரப்பட்டு கேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்த போதும் அரசினதும் அது சார்ந்த அதிகாரிகளினதும் போலியான வாக்குறுதிகளை ஏற்று தமது போராட்டங்களை கைவிட்டனர்.

கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் கடந்த ஒரு மாத காலமாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் 84 குடும்பங்களின் 42 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.

இதனையடுத்து கடந்த முதலாம் திகதி முதல் இராணுவ முகாமின் நுழைவாயிலாக காணப்படும் வற்றாப்பளை கேப்பாப்புலவு வீதியில் தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி கேப்பாபுலவு பூர்வீக மக்கள் கவனயீர்ப்புப்பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேப்பாப்புலவு சூரிபுரம் பிலக்குடியிருப்பு ஆகிய மூன்று கிராமங்களிலும் சுமார் 524 ஏக்கர் காணிகளை படையினர் வசம் வைத்திருந்த நிலையில் தற்போது பிலக்குடியிருப்பு பகுதியில் 42 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்ட நிலையில் ஏனைய 486 ஏக்கர் காணிகளையும் விடுவிக்குமாறு கோரி 145 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்று ஏழாவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.