மே தினம், சர்வதேச உலக தொழிலாளர் தினம்

485 0

உழைக்கும் மக்களின் உன்னதமான தினம் மே தினம். மே தினம் தொழிலாளர்களின் உழைப்புக்கு ஒரு அங்கீகார நாளாகும்.

உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு, உலகின் இயக்கத்திற்கு ஆணிவேராக திகழும் உழைப்பாளிகள், தங்கள் உரிமைகளை வென்றெடுத்த திருநாள் இந்த மே தினம். உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்தும் உண்மையான திருநாள் மே தினம்.

இந்த மே தினத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டியது எம் கடமை.

1800-களில் தொழிற்துறை வளர்ச்சி அடையத் தொடங்கிய காலகட்டத்தில் 20 மணி நேரம் வரை வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமை எனத் தொழிலாளர்கள் பல வகைகளில் சுரண்டப்பட்டனர். இந்தச் சுரண்டலை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடைபெற்றன. 1806-ம் ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் போராடத் தொடங்கியது.

1884-ல் அமெரிக்காவில் 8 மணி நேர வேலையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களே மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணங்களாய் அமைந்தன. 1884, அக்டோபர் 7-ம் நாள் சிகாகோவில் நடைபெற்ற மாநாட்டில், அமெரிக்கா மற்றும் கனடா தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில், 1886-ம் ஆண்டு மே முதல் நாள் முதல், வேலை நாள் என்பது 8 மணி நேரம்தான் இருக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சில மாதங்களுக்குப் பின் 1885-ல் நடைபெற்ற மாநாட்டில், முந்தைய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொழிற்சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை வளர்ந்து போராட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கின.

1886 மே ஒன்றாம் தேதி சிகாகோ நகரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு 8 மணி நேர வேலைக்காகப் போராடினர். இதனைத் தொடர்ந்து போராடியவர்களைக் கைது செய்தும், அடக்குமுறையைக் கையாண்டும் போராட்டத்தைக் கலைக்க அரசு முயன்றது. இந்த அடக்கு முறையை எதிர்த்து மே 4-ம் திகதி வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கூட்டத்தில் ராணுவ அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட, இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மோதலில் ஏழு காவல் துறையினரும் நான்கு தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர்.1886ஆம் ஆண்டின் பிற்பாதி முழுவதும் தொழிலாளர்கள் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 1889-ம் ஆண்டு மீண்டும் 8 மணி நேர வேலையை வலியுறுத்தி குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. 1889-ம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற மாநாட்டில், எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்கும் மக்கள் 8 மணி நேரத்தைச் சட்டப்பூர்வமாக்கக் கோரி போராடத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக 1890 மே முதல் நாள் சர்வதேச அளவிலான ஆர்ப்பாட்டம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

அந்தக் குறிப்பிட்ட நாளில் எல்லா நாட்டுத் தொழிலாளர்களும் அவர்களின் நாட்டு சூழ்நிலைக்கேற்ப ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என மாநாடு அறிவித்தது. இதனைத் தொடர்ந்தே ஐரோப்பா, ஜெர்மனி, அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் தொழிலாளர் போராட்டங்கள் விரிவடைந்தன. 1890-ம் ஆண்டு பல ஐரோப்பிய நாடுகளில் மே தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் மே தினக் கொண்டாட்டம் சிறிது சிறிதாகப் பல்வேறு நாடுகளில் பரவியது.

போராடிப் பெற்ற உரிமைகளைப் பற்றி அறிந்து கொள்வது எவ்வாறு நமது உரிமையோ, அதேபோல அவற்றைத் தக்க வைப்பதும் நமது கடமையாகும். அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகள் .