வசந்த கரன்னாகொடவை நியாயப்படுத்தும் அரசாங்கம் : உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சுயாதீனத்துவத்தை கேள்விக்குட்படுத்துகிறது

190 0

முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவை நியாயப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாடு, எதிர்வருங்காலத்தில் நிறுவப்படவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை தொடர்பில் சந்தேகத்தைத் தோற்றுவிப்பதாகத் தெரிவித்துள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அத்தகைய உள்ளகப்பொறிமுறையைத் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

வடமேல் மாகாண ஆளுநரும், முன்னாள் கடற்படைத்தளபதியுமான வசந்த கரன்னாகொட மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவுக்குள் பிரவேசிப்பதற்குத் தடைவிதித்திருப்பதாக அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து அறிக்கையொன்றை வெளியிட்ட இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, ஜனநாயக ஆட்சி மற்றும் நல்லிணக்கக் கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதில் இலங்கை உறுதியான முன்னேற்றத்தை அடைந்துள்ள நிலையில், வசந்த கரன்னாகொடவுக்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள அறிவிப்பு கவலையளிப்பதாக அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், ‘நல்லிணக்க செயன்முறைக்கு வெளிவிவகார அமைச்சு பொறுப்பாக இருக்கும் அதேவேளை, அமைச்சர் அலி சப்ரி இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்குரிய சட்டமூலத்தைச் சமர்ப்பிக்கவிருக்கின்றார். இருப்பினும் நல்லிணக்க செயன்முறையில் இலங்கையின் தலைமைத்துவம் மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்து நாம் எமது அதிருப்தியைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்திவந்திருப்பதுடன், அவை போதியளவு சுயாதீனத்துவமற்றவையாகக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றோம்’ என்று தெரிவித்தார்.

அவ்வாறிருக்கையில் 11 பேர் கடத்தல் மற்றும் படுகொலை விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை குறித்துக் கவலையை வெளிப்படுத்தி, அவரை நியாயப்படுத்துகின்ற இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு, தாம் இதுவரை காலமும் கூறிய விடயங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

எனவே சுயாதீனமானதும், மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானதுமான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதாயின் அது இலங்கையர்களை உள்ளடக்கிய உள்ளகப்பொறிமுறையாக அமையக்கூடாது என்றும், மாறாக சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கிய பொறிமுறையாகவே அமையவேண்டும் என்றும் குறிப்பிட்ட சுமந்திரன், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் தம்மிடம் கலந்துரையாடப்படவில்லை என்றும், அதனைத் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.