சுதந்திரத்தின் பின்னரான வரலாறு முழுவதிலும் இலங்கை புரிந்துகொள்ளத்தவறிய பல பாடங்களை கடந்த 2022 ஆம் ஆண்டு தோற்றம்பெற்ற பொருளாதார நெருக்கடியின் மூலம் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடிந்தது.
அதன்படி கடந்த 70 வருடகாலமாக நாட்டின் பொருளாதாரத்தில் வேரூன்றியிருந்த கட்டமைப்பு ரீதியான இடையூறுகளை நீக்குவதை முன்னிறுத்தி தற்போது முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்புக்களை உரியவாறு நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்துத்தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டியது அவசியமாகும்.
இம்மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளத்தவறும் பட்சத்தில், அவை பொருளாதாரக்காரணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, மக்கள்மீது தேவையற்ற அழுத்தங்களைத் தோற்றுவித்து, நீண்டகால அடிப்படையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுபீட்சம் ஆகியவற்றை அடைந்துகொள்வதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இலங்கை மத்திய வங்கி 2022 ஆம் ஆண்டுக்குரிய அதன் வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையின் 73 ஆவது ஆண்டறிக்கை கடந்த வியாழக்கிழமை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டுக்குரிய அவ்வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
இலங்கை அதன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் பொதுமக்களின் பதற்றம் மற்றும் அரசியல் கிளர்ச்சி ஆகியவற்றுக்கு வழிவகுத்த மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்குக் கடந்த ஆண்டு முகங்கொடுத்தது. அதனையடுத்து பொருளாதாரத்தின் வலுவற்ற நிலை மேலும் தீவிரமடைவதைத் தடுப்பதற்கு அவசியமான உடனடியானதும், ஒருங்கிணைக்கப்பட்டதுமான கொள்கைசார் தீர்மானங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அவ்வாறு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவுகள் கடந்த ஆண்டின் இறுதியில் கைகூடத்தொடங்கின. அதன்படி சமூக, பொருளாதார உறுதிப்பாட்டை மீட்டெடுப்பதற்கு ஏதுவான சமநிலையை நோக்கி நாடு திரும்பியுள்ள நிலையில், பன்னாட்டு நிதியியல் நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட உதவிகளும் தற்போது கிடைக்க ஆரம்பித்துள்ளன.
வரவு, செலவுத்திட்ட மீதி மற்றும் வெளிநாட்டு நடைமுறைக்கணக்கில் நீண்டகாலமாக நிலவிய பற்றாக்குறை, நிலைபேறற்ற பேரண்டப்பொருளாதார மாதிரி, உள்ளக மற்றும் சர்வதேச ரீதியிலான பொருளாதார சவால்கள் என்பன பொருளாதாரத்தின் உள்ளார்ந்த பலவீனங்கள் மற்றும் கொள்கைப்பிறழ்வுகளினால் மேலும் தூண்டப்பட்டு நாட்டை பேரழிவினை நோக்கி நகர்த்தின.
அதேவேளை பொருத்தமற்ற நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட வரிக்குறைப்புக்கள், உரியவாறான முன்னேற்பாடுகளற்ற முழுமையான சேதன வேளாண்மைத்திட்டம், படுகடன்கொடுப்பனவுகளின் பதிவைப் பேணுவதற்கான அர்த்தமற்ற முயற்சிகளுக்கு மத்தியில் நாட்டின் அலுவல்சார் ஒதுக்குகள் வீழ்ச்சியடைந்தமை, செலாவணிவீத சீராக்கத்தில் தாமதம், முற்கூட்டிய எச்சரிக்கை சமிக்ஞைகள் தொடர்பில் அவதானம்செலுத்தத் தவறியமை என்பன பொருளாதாரம் மேலும் பாதிப்படைவதற்குக் காரணமாகின.
இவற்றின் விளைவாக மக்களின் வாழ்க்கைத்தரத்தின்மீது ஏற்பட்ட தாக்கங்கள், நாட்டின் பொருளாதாரத்தை முன்னெப்போதுமில்லாத நெருக்கடியிலிருந்து விலக்கி சீராக வழிநடத்துவதற்குரிய கொள்கை மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளவேண்டிய அவசரத்தேவையைத் தோற்றுவித்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் பல மாதகாலத் தயக்கத்தின் பின்னர் கடந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்தது. அதனை முன்னிறுத்திய மறுசீரமைப்புக்கள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடனான உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கடன்வழங்குனர்களிடமிருந்து நிதியியல் உத்தரவாதத்தைப் பெற்றுக்கொள்வதை இலக்காகக்கொண்டு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், அவர்களின் உத்தரவாதத்தை அடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதியின்கீழ் எதிர்வரும் 48 மாதகாலத்தில் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் கடனுதவியை வழங்குவதற்கு நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதி வழங்கியது.
அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கை மறுசீரமைப்புக்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளன. கடந்த ஆண்டு செப்டெம்பரில் சடுதியான உச்சத்தை அடைந்த பணவீக்கம், தற்போது மீண்டும் சாதகமான வீழ்ச்சிப்பாதைக்குத் திரும்பியிருப்பதுடன் வெளிநாட்டுச்செலாவணி வீதமானது இவ்வாண்டின் தொடக்கத்தில் குறிப்பிடத்தக்களவான உயர்வினைப் பதிவுசெய்துள்ளது.
சுதந்திரத்தின் பின்னரான வரலாறு முழுவதிலும் மீண்டெழுந்த பேரண்டப்பொருளாதாரத் தோல்விகளுக்கு மத்தியில் இலங்கை புரிந்துகொள்ளத்தவறிய பல பாடங்களை கடந்த 2022 ஆம் ஆண்டு தோற்றம்பெற்ற பொருளாதார நெருக்கடி தெளிவாக எடுத்துக்காட்டியது. தரவுகளை அடிப்படையாகக்கொண்ட கொள்கை உருவாக்கத்தின் அவசியம், தற்காலிக கொள்கைப்பரிசோதனைகளின் மோசமான தாக்கங்கள், குறுகிய நோக்கங்கொண்ட ஜனரஞ்சகக்கொள்கைகளின் கடுமையான தாக்கங்கள், சான்றுகளை அடிப்படையாகக்கொண்ட கொள்கைப்பகுப்பாய்வின் அவசியம் ஆகியவற்றை இந்நெருக்கடி நன்கு புலப்படுத்தியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த 70 வருடகாலமாக நாட்டின் பொருளாதாரத்தில் வேரூன்றியிருந்த கட்டமைப்பு ரீதியான இடையூறுகளை நீக்குவதை முன்னிறுத்தி தற்போது முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்புக்களை உரியவாறு நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம், மத்திய வங்கி, ஏனைய சம்பந்தப்பட்ட கட்டமைப்புக்கள் என்பன உள்ளடங்கலாக அனைத்துத்தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டியது அவசியமாகும்.
இம்மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளத்தவறும் பட்சத்தில், அவை பொருளாதாரக்காரணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, மக்கள்மீது தேவையற்ற அழுத்தங்களைத் தோற்றுவித்து, நீண்டகால அடிப்படையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுபீட்சம் ஆகியவற்றை அடைந்துகொள்வதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மத்திய வங்கி அதன் ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

