சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பின்றி நாட்டைக் கட்டியெழுப்புவது மிகக் கடினமாகும். நான் பாராளுமன்றத்துக்குச் சென்றிருந்தால் நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களித்திருப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக பொலன்னறுவையில் தங்கியிருக்க வேண்டியேற்பட்டமையின் காரணமாகவே வாக்களிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்துள்ள அவர் , இதனை சில ஊடகங்கள் தவறான சித்தரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பொலன்னறுவையில் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வறுமை நிலைமையிலிருந்து நாட்டை மீட்பதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியமாகும். எனவே நாணய நிதியத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறும் தரப்பினர் ஆட்சியைப் பொறுப்பேற்றால் மாத்திரமே அதனை உணர முடியும். நான் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்றியிருக்கின்றேன். எனவே அதன் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை நான் நன்கு உணர்ந்திருக்கின்றேன்.
இம்முறை நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டு ஒப்பந்தத்திலும் சிறந்த பல விடயங்கள் உள்ளன. அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்று எண்ணுபவர்களே இதற்கு எதிராக கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
2018ஆம் ஆண்டு காணப்பட்ட நிலைமைக்கேணும் நாட்டைக் கொண்டு வர வேண்டும் என்பதே தற்போதைய அரசாங்கத்தின் முயற்சியாகக் காணப்படுகிறது. தனிப்பட்ட தேவைகளுக்காக பொலன்னறுவையில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அவ்வாறன்றி நான் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டிருந்தால் நாணய நிதியத்தின் ஏற்பாடுகளுக்கு ஆதரவாகவே வாக்களித்திருப்பேன்.
ஆனால் சில ஊடகங்கள் இதனை தவறாக சித்தரித்து செய்திகளை வெளியிடுகின்றன. அத்தோடு இதில் காணப்படும் சில கடுமையான நிபந்தனைகளை நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து நீக்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். எனது ஆட்சி காலத்திலும் இவ்வாறான நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன.
எனினும் நாணய நிதியப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அவற்றை நீக்கிக் கொள்ள என்னால் முடிந்தது என்றார்.

