ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்!

62 0

அரசினால் தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சட்டமாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் அது ஊடகங்களும், ஊடகவியலாளர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறிவிடும் என கிளிநொச்சி ஊடக அமையத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கிளிநொச்சி ஊடக அமையத்தினர் இன்று (28.04.2023) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,மக்களின் உரிமைகள் சார்ந்து, அவர்களின் ஜனநாயக சார்ந்த போராட்டங்கள், அரசின் ஜனநாயக விரோத செயற்பாடுகள் போன்றவற்றை சுட்டிக்காட்டி செய்திகள் எழுதினால் அந்தச் செய்தியை பிரசுரித்தால் அது பயங்கரவாரதத்தை ஊக்குவித்தல் அல்லது தூண்டுதல் என வியாக்கியானம் செய்யப்பட்டு அந்த ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் தடுத்து வைக்கமுடியும்.

மூன்று மாதங்களுக்கு தடுத்து வைக்கும் அதிகாரம் இப்புதிய சட்டத்தின் மூலம் பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனவே இங்கே இருக்கின்ற ஆபத்து என்னவெனில் பெரும்பாலான ஊடகவியலாளர்கள் சட்டத்தின் இந்த ஏற்பாட்டின் மூலம் பழி வாங்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.பொலிஸாரின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் கூட பல சந்தர்ப்பங்களில் இச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு தடுத்து வைக்கமுடியும்.இது ஊடக சுதந்திரத்திற்கும்,ஊடகவியலாளர்களின் சுயாதீனமான செயற்பாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தல்.

இதனால் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறையின் ஜனநாயக குரல் நசுக்கப்படும் அது மாத்திரமன்றி சமூக ஊடகங்களின் கருத்துச் சுதந்திரம் கூட இதனால் அடக்கப்படுகிறது.

எனவேதான் இச் சட்டமூலத்திற்கு நாம் எமது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றோம் என கிளிநொச்சி ஊடக அமையத்தின் செயலாளர் மு. தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.இங்கு கருத்துரைத்த ஊடக அமையத்தின் தலைவர் க. திருலோகமூர்த்தி இச் சட்டம் ஊடகவியலாளர்களை மட்டுமன்றி பொது மக்களையும் பாதிக்கிறது.

எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் தங்களது தொழிலை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும்.

பொது மக்களின் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படும், தமிழ் சிங்கள் இளைஞர்கள் பழிவாங்கப்படுவார்கள் எனவேதான் இச் சட்டமூலம் நிறைவேற்றப்படக் கூடாது என்பதனை நாம் வலியுறுத்துகின்றோம் என்றார்.

தொடர்ந்து பேசிய ஊடகவியலாளர் ஆர்எஸ். ரஞ்சன்,

இச் சட்டத்தின் பாதிப்புக்களையும், ஆபத்துக்களை உணர்ந்து கிளிநொச்சி ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து   (29.04.2023) கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருகின்றோம்.

எனவே குறித்த பேராட்டத்தில் பொது மக்கள் , பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என அனைவரையும் கலந்துகொண்டு ஒருமித்த குரலில் எதிர்ப்பினை வெளிப்படுத்த முன்வர வேண்டும் என்று கேட்டு்க் கொண்டார்.