சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு அனைவரினதும் ஆதரவு அவசியம் – 2022 ஆண்டிற்கான அறிக்கையில் மத்திய வங்கி

151 0

இலங்கையின் பொருளாதாரத்திற்கு தசாப்தகாலமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள விடயங்களிற்கு தீர்வைகாண்பதற்கான சீர்திருத்தங்களிற்கு ஆதரவு வழங்கவேண்டும் என இலங்கையின் மத்திய வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.

2022ம் ஆண்டிற்கான வருடாந்த அறி;க்கையிலேயே இலங்கை மத்திய வங்கியின் இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த ஏழு தசாப்தகாலமாக பாதித்துள்ள கட்டமைப்பு இடையூறுகளிற்கு தீர்வை காண்பதற்கு அவசியமான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஆதரவை இலங்கை அரசாங்கமும் மத்திய வங்கியும் அனைத்து பங்குதாரர்களும் வழங்கவேண்டும் என  மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தவறினால் அது முடிவற்ற நிரந்தர பிணை எடுப்புகள் வெளிநாடுகளிடமிருந்து நிதிஉதவி பெறும் தொடர்ச்சியான செயற்பாடுகள் மீண்டும்மீண்டும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மிகவும் பதற்றமான வர்த்தக சுற்றுக்கள் போன்றவற்றிற்கு வழிவகுக்கும் என மத்திய வங்கி2022ம் ஆண்டிற்கான  தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது பொதுமக்கள் மீது தேவையற்ற அழுத்தங்களை திணிக்கும்,நாடு நீண்டகால பொருளாதார அபிவிருத்தியை அடைவதை தடுக்கும், எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.