மன்னாரில் மீன்பிடியில் ஈடுபடுவோர் மீது கடற்படை அடாவடி – சாள்ஸ்

255 0
மன்னார் மாவட்டம் சவுத்பார் கடலில் கடற்றொழிலில் ஈடுபடும் மன்னார் மீனவர்களின் படகினை தினமும் சோதனை என்னும் பெயரில் தாமதங்களையும் இடையூறுகளையும் ஏற்படுத்தும் கடற்படையினர் இதேபகுதியில் தொழில்.புரியும் தென்னிலங்கை மீனவர்களிடம் எதனையும் கேட்பதே கிடையாது. என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின்போதே மேற்படி விடயத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
மன்னார் மாவட்டம் சவுத்பார் கடற்பரப்பில் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களும் தென்னிலங்கை மீனவர்களும்  கடற்றொழிலில் ஈடுபடுகின்றனர். இங்கே மன்னார் மீனவர்களின் படகினை மட்டும் தற்போதுவரை  தினமும் சோதனை என்னும் பெயரில் தாமதங்களையும் இடையூறுகளையும்  கடற்படையினர் ஏற்படுத்தி வருகின்றனர். மாறாக  இதேபகுதியில் தொழில் புரியும் தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர்களிடம் எதனையும் கேட்பதே கிடையாது.
தொழிலுக்குச் செல்லும் மீனவர்களின் படகினை பரீச்சிப்பதும் சோதனையிடுவதும் கடற்படையினரின் கடமையாக இருந்தால் அனைவரின் படகினையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்வையிட்டு அனைவரின் படகுகளும் சோதனையிட்டால் கடற்படையினர் தமது கடமையை செய்கின்றனர். என்று ஏற்றுக்கொள்ள முடியும். மாறாக ஓரு இணத்தவரை மட்டும் சோதனை என்னும் பெயரில் தாமதப்படுத்துவதும் சந்தேக கண் கொண்டு பார்ப்பதும் வீணான மனக் கசப்பினை உண்டு பண்ணுகின்றது.
எனவே கடற்படையினரின் பணிக்கு நாம் இடையூறாக இருக்கவில்லை.அதுதான் உங்கள் பணி என்றால் அணைவரையும் ஒரே மாதிரியான நடைமுறையின் கீழ் கொண்டு வருமாறே கோருகின்றேன்.ஏனெனில் மன்னார் சவுத்பார் பகுதியில் பரந்து பட்ட பிரதேசத்தின் ஊடாக தென்னிலங்கை மீனவர்கள் தொழிலுக்கு அனுமதிக்கப்படுகின்றபோதும். அந்த மாவட்டத்தினைச் சேர்ந்த மீனவர்கள் ஓர் ஓடைக் கரையின் ஊடாகவே தொழிலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் அவ்வாறு செல்லும் மீனவர்களையும் பாலத்தை தாண்டும் வேளையில் படகில் என்ன கொண்டு செல்கிறாய் , அனுமதிப் பத்திரம் இருக்கின்றதா , இஞ்சின் என்ன என்றெல்லாம் கடற்படையினர் சோதனையில் ஈடுபட்டு நேரத்தை விரயம் செய்வதனை தடுக்குமாறே மீனவர.களும் கோருகின்றனர். என்றார்.