குண்டு துளைக்கப்பட்ட நிலையில் உளவுத்துறை அதிகாரியின் பிணம்: பாகிஸ்தானில் பரபரப்பு

260 0

2 ஆண்டுகளுக்கு முன் கடத்தி செல்லப்பட்ட பாகிஸ்தான் உளவு அதிகாரியின் பிணம் குண்டு துளைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த உளவு அதிகாரியின் உயிரற்ற உடல் குண்டு துளைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உளவுத்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்த உமெர் மொபின் ஜிலானி ஆயுதம் ஏந்திய மர்ம நபர்களால் கடந்த ஜூன், 2014-இல் கடத்தி செல்லப்பட்டார்.
லாகூரில் இருந்து 350 கிமீ தொலைவில் உள்ள முல்தான் நகரில் சென்று கொண்டிருந்த போது ஜிலானி கடத்தி செல்லப்பட்டார். உளவுத்துறை ஆய்வாளர் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். பின் சந்தேகத்தின் அடிப்படையில் வழக்கில் தொடர்புடையதாக பலர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது, எனினும் ஜிலானி குறித்து எவ்வித தடையமும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் உமெர் மொபின் ஜிலானியின் பிணம் குண்டு துளைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உமெரின் உடல் முல்தான் பகுதியின் பழைய ஷௌஜாபாத் ரோட்டில் கண்டெடுக்கப்பட்டது. இவரது உடலில் ”டேஷ் அல்-பகிஸ்தான், இன்ஸ்பெக்டர் உமெர் மொபின் ஜிலானி, தரீக் அக்வா”, என எழுதப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. டேஷ் என்பது ஐஎஸ்ஐஎஸ் என்ற வார்த்தையின் சுருக்கம் ஆகும்.
கடத்தி கொல்லப்பட்ட உமெர் முன்னாள் தலைமை நீதிபதி தசாதுக் ஹூசைனின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உளவுத் துறை ஆய்வாளர் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்து குற்ற புலனாய்வுத் துறையை சேர்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.