சூடானிலுள்ள வெளிநாட்டவர்களை வான்வழியாக வெளியேற்ற நடவடிக்கை

141 0

சூடானில் மோதல்கள் தொடரும் நிலை­யில், அங்­குள்ள அமெ­ரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடு­களைச் சேர்ந்த இரா­ஜ­தந்­தி­ரி­களும் அந்­நா­டு­களின் மக்­களும் வெளி­யேற உத­வு­வ­தற்கு சூடானின் இரா­ணுவத் தள­பதி இணங்­கி­யுள்ளார் என சூடான் இரா­ணுவம் தெரி­வித்­துள்­ளது.

தலை­நகர் கார்ட்­டூமில், சூடான் இரா­ணு­வத்­துக்கும் துணை இரா­ணுவப் படை­யி­ன­ருக்கும் இடையில் கடந்த 15ஆம் திகதி முதல் மோதல்­கள் நடை­பெ­று­கின்­றன.

சூடானை எவ்­வாறு நிர்­வ­கிப்­பது என்­பது தொடர்­பாக, இரா­ணுவத் தள­பதி ஜெனரல் ஃபத்தா அல் புர்­ஹா­னுக்கும் ஆர்.எஸ்.எவ். எனும் துணை இரா­ணுவப் படையின் தள­பதி ஜெனரல் மொஹம்மத் ஹம்தான் தக­லோ­வுக்கும் இடை­யி­லான முரண்­பா­டுகள் கார­ண­மாக இம்­மோ­தல்கள் ஏற்­பட்­டுள்­ளன. இதனால், 400 இற்கும் அதி­க­மானோர் கொல்­லப்­பட்­டுள்­ள­துடன் 3351 பேர் காய­ம­டைந்­துள்­ளனர் என யுனிசெப் தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லையில், சூடா­னி­லுள்ள வெளி­நாட்டு இரா­ஜ­தந்­தி­ரிகள் மற்றும்  பொது­மக்­களை வெளி­யேற்­று­வ­தற்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஆனால், பாது­காப்பு அச்­சு­றுத்­தல்கள் கார­ண­மாக அத்­திட்­டங்கள் கைவி­டப்­பட்­டன.

இந்­நி­லையில், பிரித்­தா­னிய, அமெ­ரிக்க, பிரெஞ்சு மற்றும் சீனப் பிர­ஜை­களும் இரா­ஜ­தந்­தி­ரி­களும் இரா­ணுவு விமா­னங்கள் மூலம் கார்ட்­டூ­மி­லி­ருந்து வெளி­யேற்­றப்­ப­டுவர் என சூடான் இரா­ணுவம் நேற்று தெரி­வித்­துள்­ளது.

தனது பிர­ஜை­க­ளையும் நட்பு நாடு­களின் பிர­ஜை­க­ளையும் வெளி­யேற்­று­வ­தற்கு தான் ஏற்­பாடு செய்­வ­தாக சவூதி அரே­பி­யாவும் அறி­வித்­துள்­ளது. சவூதி அரே­பிய தூத­ரக ஊழி­யர்கள் ஏற்­கெ­னவே வெளி­யேற்­றப்­பட்டு விட்­டனர் என  சூடான் இரா­ணுவம் தெரி­வித்­துள்­ளது.

சூடா­னி­லுள்ள அமெ­ரிக்க இரா­ஜ­தந்­தி­ரி­களை வெளி­யேற்­று­வ­தற்கு உத­வு­வ­தற்­காக, சூடா­னுக்கு அரு­கி­லுள்ள தளங்­க­ளுக்கு அமெ­­ரிக்கப் படை­களை நகர்த்த, ஜனா­தி­பதி ஜோ பைடன் ஒப்­புதல் அளித்­துள்ளார் என வெள்ளை மாளி­கையின் தேசிய பாது­காப்புப் பேச்­சாளர் ஜோன் கேர்பி கூறி­யி­ருந்தார்.

அது எந்த இடம் என அவர் கூறவில்லை. எனினும், கார்ட்ரூமிலிருந்து 1,126 கிலோ­மீற்றர் தொலைவிலுள்ள ஜிபூட்டி நாட்டிலுள்ள அமெரிக்கப் படைத்தளத்திலிருந்து இந்­நட­வடிக்கை முன்னெடுக்கப்படலாம் என ஏற்­கெனவே செய்தி வெளியாகியிருந்தது.