பயங்கரவாத விசாரணைப்பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னாள் சட்டமா அதிபருக்கு மீண்டும் அறிவிப்பு

169 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டமை தொடர்பில் பயங்கரவாத விசாரணைப்பிரிவில் திங்கட்கிழமை முன்னிலையாகுமாறு முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவுக்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடந்த வாரம் பயங்கரவாத விசாரணைப்பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னாள் சட்டமா அதிபருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது. எனினும் அன்றைய தினம் அவர் முன்னிலையாகியிருக்கவில்லை. மாறாக அவரது சட்டத்தரணி பயங்கரவாத விசாரணைப்பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.

எனினும் 20ஆம் திகதி மீண்டும் பயங்கரவாத விசாரணைப்பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த போதிலும் , அன்றைய தினத்திலும் தன்னால் வர முடியாது என அவர் தெரிவித்திருந்தார். அத்தோடு முன்னிலையாவதற்கு பிரிதொரு தினத்தை வழங்குமாறு அவர் கோரவில்லை.

எனவே திங்கட்கிழமை (24) பயங்கரவாத விசாரணைப்பிரிவில் முன்னிலையாகுமாறு மீண்டும் அவருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. அவர் முன்னிலையாகி வாக்கு மூலம் வழங்கும் பட்சத்தில் அதன் அடிப்படையிலேயே அடுத்த கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.