குஜராத் மாநிலத்தில் 11 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் குஜராத்தின் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி உட்பட 68 பேரை குஜராத் நீதிமன்றமொன்று நேற்று விடுதலை செய்தது.
குஜராத் மாநிலத்தில் 2002-ம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதி கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் கரசேவகர்கள் 58 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு மறுநாளில், இச்சம்பவத்தைக் கண்டித்து முழு அடைப்பு நடந்தது. அஹமதாபாத்தில் இனக்கலவரங்கள் மூண்டன. அங்கு, நரோடா காம் பகுதியில் முஸ்லிம்கள் 11 பேர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக 86 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 18 பேர் வழக்கு விசாரணையின்போது மரணம் அடைந்தனர். ஒருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஏனைய 67 பேர் மீதான வழக்கு அஹமதாபாத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் நடைபெற்றது.
குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி பதவி வகித்த வேளையில் அம்மாநில அமைச்சராக பதவி வகித்த பா.ஜ.க.வின் மாயா கோட்னானி, விசுவ இந்து பரிஷத் முன்னாள் தலைவர் ஜெய்தீப் படேல், பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவர் பாபு பைராங்கி உள்பட எஞ்சிய 67 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
சுமார் 13 வருடங்கள் நடந்த இந்த வழக்கை 6 நீதிபதிகள் விசாரித்தனர்.
முதலில் நீதிபதி எஸ்.எச்.வோரா விசாரித்தார். அவர் உயர் நீதிமன்ற நீதிபதியான பின்னர், ஜோத்ஸ்னா யாக்னிக், கே.கே.பட், பி.பி. தேசாய் ஆகிய 3 நீதிபதிகள் அடுத்தடுத்து விசாரித்த நிலையில் ஓய்வு பெற்றனர். அவர்களின் பின்ர் நீதிபதி எம்.கே. தவே விசாரித்தார். இறுதியாக நீதிபதி எஸ்.கே. பாக்சி விசாரித்தார்.
அரசு தரப்பில் 187 சாட்சிகள், விசாரிக்கப்பட்டிருந்தனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் அப்போதைய பா.ஜ.க. மூத்த தலைவரும், இந்தியாவின் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா உள்பட 57 சாட்சிகள் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் நேற்று நீதிபதி எஸ்.கே.பாக்சி தீர்ப்பு வழங்கினார்.
67 பேர் மீதான குற்றச்சாட்டும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று தீர்மானித்து, விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

