ஊடகவியாலாளர்களை சுதந்திரமாக பணியாற்ற அனுமதியுங்கள்.

288 0

இன்றைய தினமான சனிக்கிழமை ஜனாதிபதி அவர்களது யாழ்ப்பாண விஜயத்தின் போது செய்தி சேகரிப்பு பணியினில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களது பணிகளிற்கு காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் தொடர்பினில் யாழ்.ஊடக அமையம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றது.

ஊடக சுதந்திரம் பற்றியும் தகவலறியும் உரிமைபற்றியும் பேசிக்கொண்டு இந்த அரசும் ஊடகவியலாளர்களது குரல்வளைகளை நெருக்கிப்பிடிப்பதை என்றுமே ஏற்றுக்கொள்ளமுடியாது.
வடகிழக்கு தமிழர் தாயகத்தினில் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டு காணாமல் போயுமிருக்கின்ற ஊடகவியலாளர்களிற்கு ஆண்டுகள் பல கடந்தும் நீதி வழங்க இந்த அரசும் தயாராவில்லையென்பதை யாழ்.ஊடக அமையம் பல சந்தர்ப்பங்களினில் சுட்டிக்காட்டியே வந்துள்ளது.

ஊடகவியலாளர்கள் வடக்கிலாயினும் சரி தெற்கிலாயினும் சரி தமது உரிமைகளை சமமாக பெற்றுக்கொள்ள உரித்துடையவர்கள் என்பது எமது அமைப்பின் நிலைப்பாடாகும்.

இன்றைய தினம் ஜனாதிபதி விஜயம் அதன் போது இடம்பெற்ற காணாமல் போனோரது போராட்டங்கள் தொடர்பினில் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ஒருவரால் ஊடகவியலாளர்களிற்கு பணியின் போது விடுக்கப்பட்ட மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களை யாழ்.ஊடக அமையம் வன்மையாக கண்டிக்கின்றது.
இத்தகைய சூழல் தொடர்பினில் அரசும் ஊடக அமைச்சும் கூடிய கவனம் செலுத்தவும் யாழ்.ஊடக அமையம் மீண்டும் கேட்டுக்கொள்கின்றது.

தலைவர்,செயலாளர்
யாழ்.ஊடக அமையம்