ஒளியைவிட 3 மடங்கு வேகம் கொண்ட ‘ஸ்பை ட்ரோன்’களை உருவாக்க சீனா திட்டம்: அமெரிக்கா

72 0

எதிர்காலத்தில் ஒளியின் வேகத்தைவிட மூன்று மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும் உளவு ட்ரோன்களை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா உளவுத் துறை ஆவணம் தெரிவிக்கிறது.

உக்ரைன் போர் திட்டங்களுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகள் உதவிய ரகசிய தகவல்கள், அமெரிக்காவின் உளவுத் துறை அமைப்பின் ஆவணங்களில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் வெளியே கசிந்தன. இதில் சீனாவின் எதிர்கால நடவடிக்கைகளை அமெரிக்கா கணித்துள்ள தகவல்களும் இடம்பெற்றிருந்தன. அது தொடர்பான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அதில், “எதிர்காலத்தில் எப்போதாவது ஒரு சூப்பர்சோனிக் உளவு ட்ரோனை உருவாக்கவும், பயன்படுத்தவும் சீனா திட்டமிட்டுள்ளது. WZ-8 என்று அழைக்கப்படும் ராக்கெட் மூலம் இயக்கப்படும் உளவு ட்ரோன், செயல்பாட்டளவில் ஒளியை விட மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்க முடியும். (ஒளி ஒரு நொடியில் 3 லட்சம் கிமீ பயணிக்கும்)” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைவான் மற்றும் சீனாவின் பிரதான நிலப் பகுதிக்கு இடையே ராணுவ பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் உளவுத் துறை தொடர்பான ஆவணத்தில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.முன்னதாக, வெளியான ஆவணத்தில் உக்ரைன் போருக்கான விளக்கப் படங்கள், ஆயுதங்கள் விநியோகம், உக்ரைன் ராணுவத்தின் தற்போதைய நிலைமை, 12 உக்ரைன் போர்ப் படைப் பிரிவுகளின் பயிற்சி அட்டவணைகள், உக்ரைன் வீரர்களுக்கு அமெரிக்க பயிற்சி அளித்த தகவல் மற்றும் பிற முக்கிய தகவல்கள் இடம்பெற்றிருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.