கொவிட் 19 காரணமாக 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரையான காலத்தில் உலகில் 67 மில்லியன் சிறார்களுக்கு வழக்கமான தடுப்பூசிகள் செலுத்தப்படவில்லை என யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்கான முடக்கநிலைகள் மற்றும் சுகாதார சேவைகளில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக, சிறார்களுக்கான ஏனைய வழக்கமான தடுப்பூசிகள் செலுத்தப்படுவது பாதிக்கப்பட்டதாக யுனிசெப் நேற்று முன்தினம் (19) தெரிவித்துள்ளது.
சிறுவர் நோய்த்தடுப்பு விடயத்தில் ஒரு தசாப்தத்துக்கும் அதிகமான காலப்பகுதியில் அடைந்த நன்மைகள் அழிந்துவிட்டன என யுனிசெப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
67 மில்லியன் சிறார்களுக்கு தடுப்பூசி ஏற்றுவது கடுமையாக பாதிக்கப்பட்டது. 48 மில்லியன் சிறார்கள் வழக்கமான தடுப்பூசிகள் முற்றாக கிடைக்கவில்லை. எனவும், போலியோ மற்றும் தட்டம்மை நோய்ப்பரவல் சாத்தியங்கள் குறித்த கவலை ஏற்பட்டுள்ளதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீpதியில் தடுப்பூசி செலுத்தப்பட்ட சிறார்களின் சதவீதம் 81 சதவீதமாக குறைந்துள்ளது. 2008 ஆம் ஆண்டின் பின்னரான மிகக் குறைந்த சதவீதம் இது. 112 நாடுகளில் சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்துதல் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆபிரிக்கா மற்றும் ஆசியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன எனவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

