நாட்டின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 11 வயதுடைய பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முணமல்தெனிய – கட்டுபொத வீதியின் அங்கமுவ பிரதேசத்தில் பாடசாலை முடிந்து பஸ் ஒன்றில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர் பஸ்ஸில் இருந்து இறங்கி அதன் பின் பக்கத்தால் வீதியைக் கடப்பதற்கு முயன்ற போது வீதியில் வந்த சிறிய ரக லொறி மோதியுள்ளது. காயமடைந்த மாணவன் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 11 வயதுடைய வலவத்த, அனுக்கன்ஹென பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். விபத்து தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாணந்துரை -இரத்தினபுரி பிரதான வீதியின் நம்பபான பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த காரொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 25 வயதுடைய இங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.மோட்டார் சைக்கிள் செலுத்திய நபரின் கவனயீனம் விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிபில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹமாபொல சந்தியில் பிடகும்புரவில் இருந்து மெதகம நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 57 வயதுடைய கொகுக்னேவ, பிபில பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

