தேசிய அரசாங்கம் அமைக்கும் முயற்சிகள் வெற்றிபெறுமா?

136 0

நாட்டில் மீண்டும் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அரசியல் களத்தில் வெகுவாக பேசப்படுகின்றது. அதாவது ஐக்கிய தேசிய கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் இணைத்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சிகள் கடந்த சில தினங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இந்த முயற்சியை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் இந்த முயற்சிக்கு பச்சைக்கொடி காட்டப்படவில்லை.  அதனால் இந்த முயற்சிகள் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய சூழலில் மீண்டும் தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்த பேச்சுக்கள் களத்துக்கு வந்திருக்கின்றமைக்கு பிரதான  காரணம் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஒன்று வரப்போவதாக தெரிவிக்கப்படுகின்றமையாகும்.  அமைச்சரவையில் மாற்றம் வரும் போது தேசிய அரசாங்கமாக அதனை உருவாக்குவது சிறந்தது என்ற ஒரு கருத்தும் அரசாங்க மட்டத்தில்  நிலவுவதாக தெரிகிறது.  இது தொடர்பில் அரசல் புரசலாக பல விடயங்கள் வெளிவருகின்றன.  அமைச்சரவை மாற்றம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள  பொதுஜன பெரமுனவின் செயலர் சாகர காரியவசம்  எமக்கும் அமைச்சுப் பதவிகள் அவசியமாகும். இது தொடர்பாக நாங்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.  இதிலிருந்து விரைவில் அமைச்சரவை மாற்றம் வரலாம் என்று பரவலாக ஊகிக்கப்படுகின்றது. எப்படியிருப்பினும் தற்போது  தேசிய அரசாங்கம் அமைக்கும் பேச்சுவார்த்தைகள் மற்றும் எதிரணியின் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையப் போகின்றார்களா என்ற பேச்சுக்களுமே அரசியல் களத்தில் வெகுவாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கட்சி தாவல்கள்

முக்கியமாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளப்போகின்றார்களா என்பதே தற்போது அரசியல் களத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற மிக முக்கியமான பேசு பொருளாக காணப்படுகிறது.  எதிரணியின் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகவும் அது தொடர்பான நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதாகவும்   தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  ஆனால் எதுவும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இது தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நடத்தப்படுகின்ற செய்தியாளர் சந்திப்புகளிலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன.  கடந்த வாரம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்திய   கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார,  ஒரு சில உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் சாத்தியம் இருக்கின்றது,    பதவி ஆசை பிடித்த சிலர் இணைந்து கொள்ளும் சாத்தியம் இருக்கின்றது,ஆனால் அது ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். எனினும் இது நடக்காது என்பதை உறுதியாக கூற முடியாது என்று கருத்து வெளியிட்டிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவின்  இந்த கூற்று ஒரு சில உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து அரசாங்கத்தில் இணைந்து கொள்வார்களா என்ற ஒரு கேள்வியை பரவலாக எழுப்புகின்றது.  காரணம் எந்த அரசியல் கட்சியும் தமது கட்சியிலிருந்து எந்த உறுப்பினரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளமாட்டார்கள் என்ற கருத்தையே மிக வலுவாக தெரிவிக்கும்.  ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தமது கட்சியிலிருந்து ஒரு சில உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கான சாத்தியம் இருக்கின்றது, அதனை முற்றாக மறுக்க முடியாது,  பதவி ஆசை பிடித்தவர்கள் இவ்வாறு செய்யலாம் என்று தெரிவித்திருக்கின்றார்.  இந்நிலையில் நளின் பண்டார அவ்வாறு தெரிவித்திருக்கின்றார் என்றால் அங்கு ஏதோ ஒரு சில சந்தேக நிலைமை இருப்பதாகவே ஊகிக்க முடிகின்றது. அதாவது ஒரு சிலர் அரசாங்கத்துடன் இணைவதற்கான சாத்தியம் இருப்பதாகவே அந்த தோற்றப்பாடு வெளிக்காட்டி நிற்கிறது. மேலும் கடந்தவாரம் செய்தியாளர் சந்திப்பை நடத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்சியில் இருக்கின்ற 70 வயதுக்கு மேற்பட்ட ஒரு சிலர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் சாத்தியம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.  இந்த கருத்தும் அரசியலில் பல கேள்விகளுக்கு வழிகோலுவதாக அமைகின்றது. எதிர்க்கட்சியின்  ஒரு சிலர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்களா என்ற இந்த பேசுபொருளை  இந்தக் கூற்றுக்கள் வலுவாக்குவதாக காணப்படுகின்றன.

பேசுபொருளான ராஜித்த எம்.பி.  

எப்படியிருப்பினும்  ஐக்கிய மக்கள் சக்தியின் சில எம்.பி.க்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளப் போகின்றார்கள் என்பது தொடர்பான உறுதியான தகவல்கள் இதுவரை  வெளிவரவில்லை. ஆனால்  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரட்ன  அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார் என்ற தகவல்கள் கடந்த காலங்களில் வெளிப்படையாக வந்து கொண்டிருந்தன. நாட்டின் பொருளாதாரத்தை ஜனாதிபதி ரணிலே மீட்டெடுத்தார் என்பது எங்களுக்கு தெரியும் என்று அண்மையில் ராஜித்த சேனாரட்ன தெரிவித்திருந்தமையும் இந்த எண்ணத்தை வலுப்படுத்துவதாக அமைந்தது. எனவே அவர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார் என்று பரவலாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தான் அரசாங்கத்தில்   தனித்து சென்று இணைந்து கொள்ளப்போவதில்லை என்பதை பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரட்ன  மிகவும் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றார்.  அவ்வாறு அவர் அறிவித்துள்ளமையும் இங்கு தீர்க்கமானதாகவே காணப்படுகின்றது.

இதேவேளை இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டிருந்த எதிர்க்கட்சி  தலைவர் சஜித் பிரேமதாச  ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து எந்த உறுப்பினரும் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள மாட்டார்கள். அவ்வாறு இணைந்து கொண்டால் அது மக்களின் ஆணையை காட்டிக் கொடுக்கும் செயற்பாடாக அமையும்.  அவ்வாறு மக்களின் ஆணையை காட்டிக்கொடுக்கும் எவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை.  பதவி ஆசை பிடித்தவர்கள் எவரும் எமது கட்சியில் இல்லை.  நாம் நிச்சயமாக எதிர்வரும் காலத்தில் ஆட்சி அமைப்போம்.   எனவே எவரும்   எமது கட்சியிலிருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளமாட்டார்கள். எமது கட்சியை சீர்குலைப்பதற்கு பல நடவடிக்கைகள் பல்வேறு தரப்பினராலும் மேற்கொள்ளப்படுகின்றன.  ஆனால் அவை வெற்றி பெறாது.  எமது கட்சியிலிருந்து எவரும் வெளியேறமாட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

பெரமுனவின் நகர்வு

இதேவேளை ஆளும் பொதுஜன பெரமுனவின் அரசியல் நகர்வுகளும் தீர்க்கமானதாகவே அமைந்துள்ளன.  அண்மையில் ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சியிலிருந்து யாராவது எம்.பி.க்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டால் அவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.  ஆனால் தற்போது  தமது கட்சிக்கு அதிகளவான உறுப்பினர்கள் அவசியம் என்பதனை உறுதியாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இராஜதந்திர நகர்வுகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம்   நாட்டின் பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டு வருவதாக பரவலாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.  முக்கியமாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாடு இருந்த நிலைமையுடன் ஒப்பிடுகையில் தற்போது குறிப்பிடத்தக்க   முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.   முக்கியமாக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த ஒரு வருட காலமாக தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியை பெற்றுக் கொள்வதில் பல சவால்களும் அரசாங்கத்துக்கு காணப்பட்டன.  எனினும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அந்த சவால்களை ராஜதந்திர ரீதியில் அணுகி   சீனா, இந்தியா,  ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளின் ஒத்துழைப்பையும் பெற்று சர்வதேச நாணயத்தின் கடனையும் பெற்றுக்கொண்டிருக்கின்றது.   பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் படிப்படியாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற சூழலில் அரசியலிலும் மாற்றங்கள் இடம்பெறலாம் என்பதே  ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கின்றது.  முக்கியமாக தற்போதைய நிலைமையில் தேசிய அரசாங்கம் அல்லது  சர்வகட்சி அரசாங்கம் அமையுமா என்பதே கேள்வியாகும். ஆனால் அதற்கான முயற்சிகள் இடம்பெற்றாலும்கூட அவை வெற்றியை நோக்கி நகர்வதாக தெரியவில்லை.  ஆளும் தரப்பிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுகின்ற தரப்பினர் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கமாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.

அமைச்சரவை மாற்றம்?  

இந்தப் பின்னணியிலேயே  தற்போதைய சூழலில் அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம் தற்போது தற்காலிக அமைச்சரவையே நியமிக்கப்பட்டுள்ளது.  எனினும் தற்போது அமைச்சரவையில் மாற்றம் இடம்பெறாது என்று அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும்கூட   அமைச்சரவையில் ஒரு சில மாற்றங்கள் இடம்பெறலாம் என்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுவே தற்போதைய இந்த தேசிய அரசாங்க பேச்சுக்களுக்கும் பிரதான காரணமாகும்.

அதற்கான நகர்வுகளும் வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றன.   ஆனாலும் அமைச்சரவையை மாற்றியமைப்பது ஜனாதிபதியை பொறுத்தவரையில் சவால் மிக்கதாகவே காணப்படுகிறது.    ஜனாதிபதி எவ்வாறு இந்த விடயங்களை சமாளிக்கப் போகிறார் என்பதும் இங்கு முக்கியமாகவுள்ளது. அதாவது அமைச்சுப் பதவிகளை பிரித்து வழங்குவது என்பது  எளிதான விடயமல்ல. 20ஆவது திருத்தத்தின்படி தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.   எப்படியிருப்பினும்  விரைவில் சில முக்கியமான அரசியல் மாற்றங்களை  எதிர்பார்க்க முடியும் என்பதே   ஆய்வாளர்களின் எதிர்வுகூறலாக இருக்கின்றது. தற்போது இடம்பெறுகின்ற நகர்வுகள் மற்றும் அணுகுமுறைகளை பார்க்கும்போது விரைவில்  அமைச்சரவையிலும்  மாற்றம் இடம்பெறலாம், அதேநேரம் புதிய முகங்களும் அமைச்சரவைக்குள் வரலாம் என்றே தெரிகின்றது. எப்போதுமே   அரசியல் என்பது விசித்திரமானது. அரசியலில் எப்போதும், எதுவும் நடக்கலாம்.

ரொபட் அன்டனி