பாகிஸ்தானில் இறை நிந்தனை குற்றச்சாட்டில் சீனப் பொறியியலாளர் கைது

187 0

சீனப் பிரஜை ஒருவர்  இறை நிந்தனை செய்தார் என்ற குற்றச்சாட்டையடுத்து, பாகிஸ்தான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைபர் – பக்துன்கவா மாகாணத்தின் அப்பர் கோஹிஸ்டான் மாவட்டத்தில் மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தாசு நீர்வலு மின்னுற்பத்திக்கான அணைக்கட்டுத் திட்டத்தில் பணியாற்றிய ஒரு பொறியியலாளர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,

கனரக வாகன சாரதிகளாக பணியாற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் அளித்த முறைப்பாடு ஒன்றையடுத்து மேற்படி சீனப் பிரஜை கோமிலா நகர பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு செய்யப்பட்டார்.

மேற்படி சீனப் பிரஜைக்கு எதிராக, சீன ஊழியர்களின் முகாம் ஒன்றுக்கு அருகில்  மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். சீன முகாம் ஒன்றுக்குள்  ஒரு குழுவினர் நுழைய முற்பட்டதையடுத்து,பொலிஸார் அங்கு சென்று அப்பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இன்று திங்கட்கிழமை காலை பெரும் எண்ணிக்கையான மக்கள் கோமிலா நகரை சென்றடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், நெடுஞ்சாலை ஒன்றையும் மறித்தனர்.

இதையடுத்து, குற்றம் சுமத்தப்பட்ட சீனப் பிரஜையின் பாதுகாப்பு கருதி, அவர் கோமிலா நகரிலிருந்து அப்போதாபாத் நகருக்கு இடம்மாற்றப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் இராணுவத்தின் ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம் அவர் அப்போதாபாத் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என கோமிலா பொலி;ஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.