உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில் தேர்தலை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருப்பது பாரிய அநியாயமாகும்.
தேர்தல் இடம்பெற்றால் அதற்கு ஐக்கிய தேசிய கட்சி தயாராகவே இருக்கிறது. அத்துடன் தற்போதுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று இடம்பெறுவதே பொருத்தமாகும் என ஐக்கிய தேசிய கட்சி பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமாக சிறிகொத்தவில் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் இலட்சக்கணக்கில் கட்டுப்பணம் செலுத்தி இருக்கின்றன.
இந்நிலையில் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் புஞ்சிஹேவா தேர்தலை திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருக்கிறார். கட்டுப்பணம் செலுத்திய பின்னர் இவ்வாறு தேர்தலை ஒத்தி வைத்திருப்பதானது பாரிய அநியாயமாகும்.
ஏனெனில் தேர்தலை நடத்த முடியாத சூழல் இருப்பதை தெரிந்துகொண்ட பின்னர் தேர்தல் ஆணைக்குழு தேர்தலுக்கு அறிவிப்பு செய்திருக்காமல் இருந்திருக்க வேண்டும். தற்போதுள்ள நிலையில் இந்த வருடம் தேர்தல் இடம்பெறுமா என்ற சந்தேகம் எழுகிறது.
அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக இலட்சக்கணக்கில் செலுத்தப்பட்ட பணம் தற்போது எந்த பிரயோசனமும் இல்லாமல் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த பணம் செலுத்தப்பட்டிருக்காவிட்டால், ஏதாவது பிரயோசனமான ஒரு வேளைக்காக அதனை பயன்படுத்தி இருக்கலாம். தற்போது தேர்தலும் இல்லை பணமும் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
அத்துடன் உள்ளூராட்சி, மாகாணசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதன் மூலம் தற்போதுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது.
பொருளாதார நெருக்கடிகளை சமாளித்துக்கொண்டு அதற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்துவருவது ஜனாதிபதியாகும்.
அதனால் ஜனாதிபதி தேர்தலை நடத்தி ஜனாதிபதி ஒருவரை நியமித்துக்கொண்ட பின்னர் அடுத்துவரும் தேர்தல்களை அடுத்தடுத்து நடத்த முடியும். அதனால் எதிர்வரும் வருடம் அனைத்து தேர்தல்களையும் நடத்த முடியுமாகும் என எதிர்பார்க்கிறோம்.
அத்துடன் எதிர்வரும் காலம் பொருளாதார ரீதியில் மிகவும் சவால்மிக்கதாகும். அதற்கு முகம்கொடுக்கும் வகையில் செயற்பட வேண்டி இருக்கிறது.
மக்களின் பொருளாதார கஷ்டத்தை போக்குவதற்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுத்து வருகிறார் என்றார்.

