பிரதிபொலிஸ்மா அதிபர்கள் , நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் மீது நம்பிக்கை அற்றவர்களே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை எதிர்க்கின்றனர்.
அவ்வாறானவர்கள் தமக்கு இந்த சட்ட மூலம் வேண்டாம் என்றும் , தாம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது மாத்திரமே நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பான புரிதல் அற்றவர்களே அதனை எதிர்க்கின்றனர். பயங்கரவாத ஒழிப்பு சட்ட மூலம் 1979ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த சட்டம் இன்றும் நடைமுறையிலுள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய சட்ட மூலத்தில் பல தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.
தடுப்புக்காவலில் வைப்பதற்கான அதிகாரம் இதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் மாத்திரமே காணப்பட்டது. எனினும் புதிய சட்ட மூலத்தின் ஊடாக அந்த அதிகாரம் பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கும் , நீதவான் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ்மா அதிபர்கள் , நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் மீது நம்பிக்கை அற்றவர்களே இதனை எதிர்க்கின்றனர்.
அவ்வாறெனில் அவர்கள் ஜனாதிபதியிடம் மாத்திரம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமையை விரும்புகின்றனரா? ஜனாதிபதியின் மீது மாத்திரமே தமக்கு நம்பிக்கை இருப்பதாகக் கூறுபவர்கள் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் அதனை குறிப்பிட வேண்டும் என்றார்.

