அதிமுக பொதுச் செயலாளர் பதவி பிடிக்க சசிகலாவுக்கு எதிராக டிடிவி தினகரன் சதியா?:

351 0

அதிமுக பொதுச் செயலாளர் பதவி விவகாரத்தில் சசிகலாவுக்கு எதிராக டிடிவி தினகரன் சதி செய்து இருக்கலாம் என்று அவரது உறவினர்களே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா, நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம், சசிகலா தற்போது அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு சிறைக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், இந்த நோட்டீசுக்கு சசிகலா விளக்கம் அளிக்கவில்லை. அவருக்குப் பதில், அவரது அக்கா மகன் டிடிவி தினகரன் 5 கடிதங்கள் மூலம் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், அவரது பதிலை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம் அவரது பதிலை நிராகரித்துள்ளது. மேலும் சசிகலாவோ அல்லது அவரது அதிகாரம் பெற்றவரோ விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்த விவகாரத்தில் சசிகலா அனுமதி பெறாமல் டிடிவி தினகரன் ஏன் தன்னிச்சையாக விளக்கம் அளித்தார் என்று தற்போது கட்சியினர் மத்தியிலும், அவரது உறவினர்கள் மத்தியிலும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே கட்சி மற்றும் ஆட்சியை தன்னுடைய கைப்பிடிக்குள் கொண்டு வரவேண்டும் என்று திட்டமிட்டு டிடிவி தினகரன் செயல்பட்டு வருவதாக அவரது உறவினர்களுக்குள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சசிகலாவின் கணவர் நடராஜன், தம்பி திவாகரன் ஒரு அணியாகவும், டிடிவி தினகரன் மற்றும் அவரது மைத்துனரும், சசிகலாவின் அண்ணன் மகனுமான வெங்கடேஷ் ஆகியோர் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களிடம் உறவினர்கள் யாராவது உதவிகள் கேட்டால் செய்ய வேண்டாம் என்று டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார். திவாகரனின் சம்மந்தியான கூடுதல் எஸ்பி ஜெயச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம், உளவுத்துறையில் இருந்து கன்னியாகுமரிக்கு மாற்றினார். அவரை மீண்டும் உளவுத்துறைக்கு மாற்ற வேண்டும் என்று திவாகரன் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இதை டிடிவி தினகரன் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். மேலும் நடராஜன், திவாகரனின் ஆதரவு அதிகாரிகளை முக்கிய பதவிகளுக்கு நியமிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதையும் தினகரன் மறுத்து விட்டார். இந்த மோதலில் கட்சியையும், ஆட்சியையும் தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

இதனால் தற்போது சிறையில் உள்ள சசிகலாவை, கட்சியில் முற்றிலும் ஓரங்கட்டும் விதமாக தினகரன் செயல்பட்டு வருவதாகவும் தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதன் ஒரு கட்டமாகத்தான், சசிகலாவிடம் கலந்தாலோசிக்காமல் தானாகவே பதில் அளித்துள்ளார். அதில், பெரிய அளவில் சதி திட்டம் இருக்கலாம் என்றும் அதிமுகவினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஆட்சியை நேர்மையாக நடத்துகிறவர்கள், எப்படி தன்னுடைய சார்பாக தளவாய் சுந்தரத்தை அனுப்பி அமைச்சர்களிடமும், முதல்வர் எடப்பாடியிடமும் தனது அதிகாரத்தை காட்டி வருகிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதை சிறையில் ஒரு முறை தன்னை சந்தித்தபோது தினகரனிடமே சசிகலா நேரில் கேட்டுள்ளார்.

தற்போது சசிகலாவிடம் எந்த ஆலோசனையும் கேட்காமல் கட்சியை நடத்தி வருகிறார். அவர் சிறையில் இருந்து வரும்போது கட்சி முழுமையாக தினகரனின் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் அவர் நடந்து கொள்கிறார். இதனால்தான் தேர்தல் ஆணைய விவகாரத்திலும் தன்னிச்சையாக நடந்து கொள்கிறார் என்றும் சசிகலாவின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அவர்களது இந்த திடீர் குற்றச்சாட்டு அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தினகரனின் ஆதரவாளர்களோ கட்சிக்கு எது நன்மையோ அதைத்தான் அவர் செய்கிறார் என்று பதில் விளக்கம் அளித்து வருகின்றனர்.