தீபா பேரவைக்கு முழுக்கு போட்டார் கணவர்: தம்பதியிடையே நிலவும் கருத்து வேறுபாட்டால் ஆதரவாளர்கள் குழப்பம்

260 0

தீபா பேரவையை விட்டு விலகுவதாக அவர் கணவர் மாதவன் அறிவித்துள்ளதால் அவரை நம்பியிருந்த ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தொடங்கியுள்ள எம்ஜிஆர் அம்மா தீபா பேரவைக்கு நிர்வாகிகள் நியமிப்பதில் தீபாவுக்கும் அவர் கணவர் மாதவனுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. தன்னை சந்திக்கும் ஆதரவு நிர்வாகிகளிடம் மாதவன் பணம் பெற்றுக் கொண்டு பொறுப்பு தருகிறேன் என உறுதி அளித்ததாகவும் புகார் எழுந்தது. இந்த தகவல் தீபாவுக்கு சென்றதால் மாதவன் பரிந்துரைத்த நபர்களுக்கு பதவி வழங்க தீபா மறுத்தார். இதனால் கோபம் அடைந்தார் மாதவன். மேலும் மாதவன் பேச்சை தீபா கேட்காததுடன் அவ்வப்போது நடக்கும் ரகசிய கூட்டத்துக்கு அவரை அழைத்து செல்வதையும் தவிர்த்தார்.

இதனால் கணவன், மனைவி இடையே மோதல் வலுத்தது. இந்த நிலையில் திரைமறைவில் நடந்து வந்த குடும்ப சண்டை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தன்னை நம்பாமல் வீட்டில் உள்ள சில வெளியாட்களை நம்பி அரசியல் செய்வதாக மாதவன் தீபா மீது அதிருப்தி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தீபாவுடன் காரில் வெளியே செல்லும்போது ராஜா கார் ஓட்டுவதில்லை என்றும், அதற்கு பதில் புதிய டிரைவரை தீபா நியமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அரசியலில் இறங்கிய சில நாட்களிலேயே தீபா குடும்ப சண்டையில் சிக்கி தவிப்பது அவர் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், பேரவையில் இருந்துதான் விலகுவதாக மாதவன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாதவன் கூறுகையில், ‘கடந்த 3 மாதமாக இருவரும் இணைந்து நல்ல முடிவு எடுத்து வந்தோம். தற்போது நிலைமை மாறிவிட்டது. தீபா ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தது, பேரவை தொடங்கியது, பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிட்டது எதுவுமே எனக்கு தெரியாது. அவை அனைத்தும் தீபாவின் தனிப்பட்ட செயல்பாடு. தீபா தனித்து செயல்பட விரும்புகிறார். நான் இனி பேரவை சம்பந்தமான நடவடிக்கையில் ஈடுபட மாட்டேன். தீபா நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்பதே என் விருப்பம’என்றார்.

மாதவனின் இந்த அதிரடி முடிவால் அவரை நம்பி இருந்த ஏராளமான ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவின் கணவர் என்ற முறையில் ஆரம்பத்தில் மாதவனை தான் ஆதரவாளர்கள் சந்தித்து தங்கள் விவரங்களை கொடுத்து வந்தனர். பேரவையின் பெயர் வெளியிடும்போதும் அவர் கூடவே இருந்தார். ஆனால் தற்போது பேரவையில் இருந்து அவர் வெளியேறி இருப்பது கடும் அதிர்ச்சியை தொண்டர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இதுவரை பட்ட கஷ்டம் அனைத்தும் வீணாகிவிட்டது என ஆதரவாளர்கள் புலம்பி உள்ளனர். ஓபிஎஸ் பக்கம் செல்வது குறித்தும் தீபா ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

என் மீது வதந்தி பரப்புகின்றனர்: தீபா பேச்சு

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா நேற்று தன் வீட்டு முன்பு கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் பேசியதாவது: நான் அரசியலுக்கு வருவது பிடிக்காமல் சில கொள்ளை கும்பல் எனக்கு அரசியல் தெரியாது என்றும், முடிவு எடுக்க முடியாமல் திணறுவதாகவும் திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர். நான் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்படி செயல்படுகின்றனர். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். என் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா? நான் தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன். நான் ஏற்கனவே கூறியதுபோல என்னை நம்பி வந்தவர்களை கைவிட மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

பேரவையில் இருந்து தான் விலகுவதாகவும், இனி எனக்கும் பேரவைக்கும் சம்பந்தம் கிடையாது எனவும் தீபா கணவர் மாதவன் தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று ஆதரவாளர்கள் மத்தியில் தீபா பேசும்போது அவர் அருகில் மாதவனும் நின்றார். இதனால் இருவரும் சமாதானம் ஆகிவிட்டதாக ஆதரவாளர்கள் நினைத்தனர். ஆனால் அருகில் நின்றாலும் தீபா மாதவனை கண்டு கொள்ளவில்லை. இது ஆதரவாளர்களுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.